செய்திகள்

கிழக்கு மாகாண கூட்டமைப்பு உறுப்பினர்களின் பாதுகாப்பு வாபஸ்: மைத்திரியை ஆதரித்ததன் எதிரொலி!

கிழக்கு மாகாண சபையின் தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இருவரின் பொலிஸ் பாதுகாப்பு திடீரென விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபாலவை ஆதரிப்பதென கூட்டமைப்பு எடுத்த முடிவையடுத்தே அதிரடியாக இவர்களுக்கான பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டிருக்கின்றது.

தமது கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் இருவரின் பொலிஸ் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரமுகர் ஒருவர் தெரிவித்திருக்கின்றார். அம்பாறை மாவட்ட உறுப்பினர்களான முருகேசு இராஜேஸ்வரன், தவராசா கலையரசன் ஆகிய இருவரின் பொலிஸ் பாதுகாப்பே எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென நீக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் 11 பேரில் 8 பேர் மட்டுமே மாகாண சபை உறுப்பினர்களுக்குரிய பொலிஸ் பாதுகாப்பை ஏற்கனவே பெற்றிருந்தார்கள். அவர்களில் அம்பாறை மாவட்ட உறுப்பினர்கள் இருவரின் பொலிஸ் பாதுகாப்பு மட்டுமே திடீரென நீக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பது என தமது கட்சி எடுத்த தீர்மானத்தையடுத்து தேர்தல் பரப்புரைகளில் கூட்டமைப்பினர் இறங்கியதையடுத்தே அவர்களின் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மாகாண சபை உறுப்பினர்கள் கல்முனை பொலிஸ் பொறுப்திகாரியிடம் கேட்ட போது, மேலிடத்து உத்தரவுக்கமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.