செய்திகள்

கிழக்கு மாகாண சபையில் கூட்டமைப்புக்கு இரு அமைச்சர் பதவிகள்: அரியநேத்திரன் தகவல்

கிழக்கு மாகாண சபையில் யார் முதலமைச்சராவது, ஆட்சியமைப்பது என்பது தொடர்பில் மு.கா.வுக்கும் த.கூட்டமைப்புக்கும் இடையில் எழுந்த கருத்து முரண்பாடுகள் பேச்சு வார்த்தை மூலம் சுமுகமாகத் தீர்க்கப்பட்டுள்ளன.

இதையடுத்து கிழக்கு மாகாண சபையில் இரண்டு அமைச்சுக்களையும் – பிரதி தவிசாளர் பதவியையும் பெற்றுக் கொள்ள த.கூட்டமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ¤ம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இத ற்கான இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ப. அரியநேத்திரன் நேற்றுத் தெரிவித்தார்.

இரண்டு அமைச்சுப் பதவிகள் மற்றும் பிரதித் தவிசாளர் பதவிகளுக்கு யாரை நியமிப்பது அவர்களுக்கு எந்தெந்த அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளன போன்ற விபரங்களை எதிர்வரும் 24ம் திகதிக்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளி யிடுமெனவும் அரியநேத்திரன் எம்.பி. தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைமை; உயர் மட்ட செயற்குழு மற்றும் கிழக்கு மாகாண சபையில் அங்கம் வகிக்கும் பதினொரு உறுப்பினர்களும் கூடி ஆராய்ந்து இதற்கான இறுதி முடிவினை எட்டவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இரு கட்சிகளுக்குமிடையில் இணக் கப்பாடு ஏற்பட்டதையடுத்து அண்மைக் காலமாக நிலவி வந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் தொடர்பில் ஏற்கனவே எழுந்த சர்ச்சைகள் மற்றும் பல்வேறு கருத்துக்களுக்கு மத்தியில் மாகாண முதலமைச்சராக கடந்த சில தினங்களுக்கு முன்பு முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரான நசிர் அகமட் நியமிக்கப்பட்டார்.

அதனையடுத்து அமைச்சுப் பதவிகள் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ¤க்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் பேச்சு வார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன. மத்தியில் கூட்டுக் கட்சிகளின் தேசிய அரசாங்கமொன்று ஆட்சியிலுள்ள நிலையில் அதற்கு முன்மாதிரியாக கிழக்கு மாகாண சபையிலும் அனைத்துக் கட்சிகளும் இணைந்த கூட்டு அரசாங்கம் ஒன்று அமைய வேண்டும் என்பது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்தி வந்தது.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் கிழக்கு மாகாண சபையில் அங்கத்துவம் வகிக்கும் ஏனைய கட்சிகளின் இணக் கப்பாட்டைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டன. இத்தகைய நிலையில் பல்வேறு கருத்துக்கள் வாத விவாதங்கள், சர்ச்சைகள் பல்வேறு தரப்பிலிருந்தும் வெளிவந்தன.

இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நேற்று மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, முதலமைச்சர் பதவி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ¤க்குக் கிடைத்துள்ளதால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உட்பட கிழக்கு மாகாண சபையில் அங்கம் வகிக்கும் கட்சிகளோடு அமைச்சுப் பதவிகளைப் பகிர்ந்து கொள்வது என்ற முடிவினை புதிய முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

இதற்கமைய அமைச்சுப் பொறுப்புக்கள் பற்றிய இறுதித் தீர்மானம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும் அவருடன் கலந்துரையாடிய பின்னரே மேற் கொள்ளப்படும் என்றும் கிழக்கு முதல மைச்சர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.