செய்திகள்

கிழக்கு முதலமைச்சர் தொடர்பில் அரசு தனது நிலைப்பாட்டடை மீளாய்வு செய்ய வேண்டும் : இரா.துரைரெட்ணம் (காணொளி இணைப்பு)

ஜனாதிபதி அவர்கள் கிழக்கு மாகாண தமிழ் மக்களை கைவிட்டுவிட்டாரா அல்லது பக்கச்சார்பாக நடக்கின்றாரா அல்லது இனவாதமாக பார்க்கின்றரா அல்லது கடந்த கால ஆட்சியாளர்களைப்போல் இந்த ஜனாதிபதியும் தமிழ் மக்களை புறக்கணித்து செயற்படுகின்றாரா என்ற சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுவதற்கான சூழல் உருவாகியிருக்கின்றது. இந்த சந்தேகத்தை தவிர்க்க வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கு இருக்கின்றது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=f7wuN2k-H4A” width=”500″ height=”300″]
இவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்தாவது,

மத்திய அரசாங்கத்தில் மாற்றம் உண்டாக கிழக்கு மாகாணசபையில் மாற்றம் உருவாகக்கூடீய சூழல் உருவாகியிருக்கின்றது. இந்த மாற்றத்தினை ஏற்படுத்தும் முகமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது பல திட்டங்களை முன்னெடுத்திருந்தது.

முதலாவதாக முஸ்லிம் காங்கிரசுடன் பேசி முதலமைச்சரை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பெற்றுக்கொண்டு ஒரு கூட்டாட்சி அமைப்பதற்கான முயற்சியை மேற்கொண்டு அது வெற்றியடையாத நிலையில் இரண்டாவதாக ஜனாதிபதி, பிரதமருடன் பேசி அனைவரும் சேர்ந்து ஆட்சியமைக்கக்கூடிய ஒரு சூழலை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்தோம்.

கிழக்கு மாகாணத்தில் அறுபத்தைந்து சதவீத மக்கள் கொடுங்கோலாட்சிளை நிறுத்தி ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்திருக்கின்றார்கள். கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளை பெற்று பதினொரு ஆசனங்களை கைப்பற்றி கடந்த முறை கிழக்கு மாகாண ஆட்சி புறக்கணிக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களுக்கு ஒரு முன்னுதாரணமாக நல்லெண்ண சமிக்ஞையாக முதலமைச்சரையும் ஆட்சியமைப்பதற்கான சூழலையும் உருவாக்க வேண்டும்.

கடந்த இரு நாட்களாக எமது தலைவர்கள் ஜனாதிபதியை சந்தித்து பேசியபோதும் சாதகமான பதில் கிடைக்கவில்லை. ஆட்சிமாற்றத்திற்கு காரணமான கிழக்கு மாகாண மக்களை புதிய ஜனாதிபதி அவர்கள் கைவிட்டுவிட்டாரா அல்லது தொடர்ச்சியாகவும் வருகின்ற அரசாங்கங்கள் தமிழ் மக்களை ஏமாற்றுகின்றதா என்ற சந்தேகம் உருவாகின்றது.

கிழக்கு மாகாண மக்கள் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு வாக்களித்தவர்கள் என்ற வகையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் இந்ததேர்தல் வெற்றிக்காக செயற்பட்டவர்கள் என்ற வகையில் கிழக்கு மாகாண மக்கள் கடந்த காலத்தில் கிழக்கு மாகாண ஆட்சியாளர்களால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள், இந்த பாதிப்பிலிருந்து விடுபடுவதற்கு ஜனநாயக முறையில் பதினொரு ஆசனங்களை பெற்ற அதிக வாக்குகளையும் பெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு முதலமைச்சர் பதவி கிடைப்பதோடு ஆட்சியாளராக மாறுவதற்கு ஏற்ற சூழல் உருவாவதற்கு புதிய ஜனாதிபதி அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த தினங்களில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் முடிவால் நாங்கள் கவலையடைகின்றோம். ஜனாதிபதி அவர்கள் கிழக்கு மாகாண தமிழ் மக்களை கைவிட்டுவிட்டாரா அல்லது பக்கச்சார்பாக நடக்கின்றாரா அல்லது இனவாதமாக பார்க்கின்றரா அல்லது கடந்த கால ஆட்சியாளர்களைப்போல் இந்த ஜனாதிபதியும் தமிழ் மக்களை புறக்கணித்து செயற்படுகின்றாரா என்ற சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுவதற்கான சூழல் உருவாகியிருக்கின்றது. இந்த சந்தேகத்தை தவிர்க்க வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கு இருக்கின்றது. இன்னும் காலம் கடந்துவிடவில்லை. எதிர்வரும் பத்தாம் திகதிக்கிடையில் பல நாட்கள் இருக்கின்றன.

அதற்கிடையில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் ஆட்சியாளர்களாகின்ற சூழ்நிலை ஜனாதிபதியால் உருவாக்கப்படவேண்டும். இதுதொடர்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுடன் பேசி ஒரு இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும். அப்படியில்லாவிட்டால் கிழக்கு மாகாண மக்களை இந்த அரசாங்கம் ஏமாற்றிவிட்டது என்ற முடிவிற்கு தமிழ் மக்கள் வந்துவிடுவார்கள் என்பதை வேதனையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

எங்களை பொறுத்தவரை மத்திய அரசாங்கத்தில் எந்தப் பதவியையும் நாங்கள் கோரவில்லை. மத்திய அரசில் அதிகாரப்பங்கீடு தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவிற்கு எமது தலைவர் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிக்கின்றார்.

மத்த்திய அரசில் எந்தப் பதவியையும் பட்டத்தையும் நாங்கள் கோரவில்லை. கிழக்கு மாகாணத்தில் மட்டும் ஆட்சியாளராக மாறுவதற்குரிய வேலைத்திட்டங்கள் மத்திய அரசால் மேற்கொள்ளப்படவேண்டும். நாற்பது வீத தமிழ் மக்கள் வாழ்கின்ற கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சர் பதவி எமக்கு தரப்படவேண்டும். இது எமது உரிமை. சலுகையல்ல. பதினொரு ஆசனங்களையும் அதிக வாக்குகளையும் பெற்றவர்கள் என்ற அடிப்படையில் நாங்கள் இதை கோருகின்றோம்.

கிழக்கு மாகாண மக்களை பொறுத்தவரை இனரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் மாற்று இனத்திற்கு இந்தப் பதவி வழங்கப்படக்கூடாதென அவர்கள் கருதுகின்றனர். அது பாதிப்பின் வெளிப்பாடாகும். ஆனால் நாங்கள் அவர்களுடன் ஐக்கியமாக வாழக்கூடாதென கூறவில்லை.

கடந்தமுறை அப்படியான பொறுப்புகளை அவர்களுக்கு வழங்கியதன் விளைவாக நாங்கள் பாதிக்கப்பட்ட வரலாறு இருக்கின்றது. அது அல்லாத பட்சத்தில் அடைக்கால மாற்றுத்திட்டம் ஒன்றை ஏற்படுத்த வேண்டியது தமிழ் மக்களின் கடமையாகும். கிழக்கு மாகாண தமிழ் மக்களை பொறுத்தவரை ஏனைய சிறுபான்மையினத்தோடு பரஸ்பரம் ஒரு ஒப்பந்தத்தின் ஊடாக முதலமைச்சரை வழங்கி ஏனைய அமைச்சுகளை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பெற்றுக்கொண்டு ஆட்சியாளர்களாக மாறவேண்டுமென கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள்.

இதை மீளாய்வு செய்ய வேண்டிய பொறுப்பு மத்திய அரசை சார்ந்தது. இனங்களுக்கிடையே முரண்பாடுகளை தவிர்த்துக்கொள்ளும் முகமாக மத்திய அரசு செயற்பாட்டில் ஈடுபடவேண்டும்.