செய்திகள்

குடாநாட்டின் சட்டம், ஒழுங்கைப் பேண அனைவரதும் பங்களிப்பு அவசியம்: டக்ளஸ் தேவானந்தா

யாழ். குடாநாட்டிற்கான காவற்துறை அதிகாரிகளை நியமனம் செய்யும்போது, அப்பகுதி மக்களுடன் உணர்வு பூர்வமான முறையில் இணைந்து சட்டத்தையும், ஒழுங்கையும், அமைதியையும் நிலைநாட்டக் கூடிய தகுதியுடையவர்களே நியமிக்கப்படல் வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

யாழ். குடாநாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் குற்றச் செயல்கள் தொடர்பில் யாழ். பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் இன்றைய தினம் கலந்துரையாடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த செயலாளர் நாயகம் அவர்கள், எமது மக்களின் பிரச்சினைகளை இனங்கண்டவர்களாகவும், உணர்வுபூர்வமாக அப் பிரச்சினைகளை அணுகக் கூடியவர்களாகவும் காவற்துறையினர் தங்களது கடமைகளை மேற்கொள்ள வேண்டும்.

யுத்தம் நிலவிய கடந்த காலங்களில் தண்டனைகளுக்காகவும் காவற்துறையினர் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு மாற்றப்படுவதுண்டு. இவ்வாறு மாற்றப்படுபவர்கள் பற்றுதல் அற்றவர்களாகவே கடமைகளை செய்வதுண்டு. இன்று அந்த நிலை மாறுபட்டு வருகிறது.

பொலிஸ் துறையினர் தங்களது கடமைகளை சரிவர நிறைவேற்றும்போது பொதுமக்களின் உறவுகள் அவசியமாகும். எனவே காவற்துறையினர் தங்களது நம்பகத் தன்மையைப் பேணும் முறையிலேயே இதனை ஏற்படுத்தவும், வளர்க்கவும் முடியும்.

அதேநேரம் பொது மக்கள் பாதுகாப்புக் குழுக்களில் இருக்கக் கூடியவர்கள் சிலரும் சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும், இதற்கு காவற்துறை சார்ந்த சிலரும் துணை நிற்பதாகவும் பொது மக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கின்றன.

எனவே, குடாநாட்டில் சட்டம், ஒழுங்கு மற்றும் அமைதியை நிலைநாட்ட பொலிஸார் முனைப்புடன் செயற்படுவது அவசியம். இதற்கு எமது மக்களும், பொது அமைப்புக்களும் பங்களிப்பாற்ற முன்வர வேண்டும். இதற்கான சூழல் கட்டியெழுப்பப்பட்டு. பேணப்படுதல் முக்கியமானது. அத்துடன், இவ்வாறான விடயங்கள் தொடர்பில் பொது மக்களுக்கு தெளிவூட்டும் வகையிலான விழிப்புணர்வு நிகழ்வுகளை மேற்கொள்வதற்கு பொது மக்கள் அமைப்புக்களும் முன்வர வேண்டும் என்றும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.