செய்திகள்

குடாநாட்டில் உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள உள்ள காணிகளை விடுவிக்க உடன் நடவடிக்கை: சுமந்திரன்

குடாநாட்டில் ராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக கையகப்படுத்தி வைத்திருக்கும் பொதுமக்களுடைய சொந்தக் காணிகளில் ஒரு தொகுதியே விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தமிழ்த்தேசிய பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு யாழ்.அரசாங்க அதிபராக இருந்த திருமதி.இமல்டா சுகுமார் உச்சநீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்த சிபாரிசின் அடிப்படையில் முதற் கட்டமாகத் தெரிவு செய்யப்பட்ட 8 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்படவுள்ளன என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் :-

கடந்த 2012ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் அரசாங்க அதிபராக இருந்த திருமதி.இமெல்டா சுகுமார், வலி.வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக உள்ள பகுதிகளில் 8 கிராம சேவகர் பிரிவுகளை விடுவிப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாக மாவட்டச் செயலகத்தினால் எடுக்கப்பட்ட புள்ளி விரபங்களின் அடிப்படையில் உச்சநீதிமன்றத்திற்கு சிபாரிசு ஒன்றை அனுப்பிவைத்திருந்தார். அனுப்பி வைக்கப்பட்ட சிபாரிசு இதுவரை காலமும் நடைமுறைக்குக் கொண்டுவரப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இவ்வாறு உச்சநீதிமன்றத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட சிபாரிசின் அடிப்படையில் கையகப்படுத்தி வைக்கப்பட்டுள்ள 6 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள 15 கிராம சேவையாளர் பிரிவுக்களின் சுமார் 25 ஆயிரம் மக்களை உள்ளடக்கிய 8 கிராம சேவகர் பிரிவுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கையின் மேற்கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழு ஆராய்ந்து வலி.வடக்கில் மீள்குடியேற்றத்தை மிக விரைவில் நடைமுறைப்படுத்தும் என்றார்.