செய்திகள்

குடாநாட்டில் போதைப் பொருள் விழிப்புணர்வு ஊர்வலம்

வடமாகாணக் கல்வியமைச்சின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்டத்திலுள்ள ஐந்து கல்வி வலயங்களான வலிகாமம், யாழ்ப்பாணம், தீவகம், வடமராட்சி, தென்மராட்சி ஆகியவற்றில் நேற்று வெள்ளிக்கிழமை போதைப் பொருளுக்கெதிரான விழிப்புணர்வு ஊர்வலம் அமைதியான முறையில் இடம்பெற்றன.

யாழ்ப்பாணம் ஏ-9 வீதியில் தண்ணீர்த் தாங்கியடிப் பகுதியில் வடக்கு மாகாணக் கல்வியமைச்சர் எஸ்.குருகுலராஜா தலைமையில் ஆரம்பித்த பேரணியில் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராசா உட்பட பல அரசியல் பிரமுகர்களும் பங்கேற்றனர். நல்லூர் கோட்டப் பாடசாலைகளுக்கான போதைப் பொருள் எதிர்ப்பு ஊர்வலம் கோண்டாவில் இராமகிருஷ்ணா மகாவித்தியாலயத்தில் ஆரம்பமாகி கொக்குவில் இந்துக் கல்லூரியில் நிறைவடைந்தது.

வலிகாமம் கல்வி வலயத்திலுள்ள உடுவில், தெல்லிப்பழைக் கோட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் உடுவில் மகளிர் கல்லூரியில் ஒன்றுகூடி பின்னர் மருதனார்மடம் உரும்பிராய் வீதி வழியாக இராமநாதன் கல்லூரியைச் சென்றடைந்தனர்.

இதில் வடமாகாண சபை உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், பாலச்சந்திரன் கஜதீபன் ஆகியோர் கலந்து கொண்டு போதைப் பொருட்கள் பாவனையைக் கட்டுப்படுத்தல் தொடர்பாக உரையாற்றினர். மற்றும் கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த விழிப்புணர்வுப் பேரணிகளில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் போதைப் பொருள் மற்றும் மதுபாவனை,பாலியல் வன்கொடுமைகளுக்கெதிரான சுலோகங்களை ஏந்தியிருந்தனர்.

யாழ்.மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களிலும் இடம்பெற்ற இன்றைய விழிப்புணர்வு ஊர்வலங்களில் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும், ஆசிரியர்களும் பங்குபற்றியிருந்தனர்.

33 22