செய்திகள்

குறைகூற விரும்பாத அமெரிக்க- இந்திய அரசுகள்

—இராணுவம் மக்களைத் துன்புறுத்தாமல், போர் விதிகள் பின்பற்றப்பட வேண்டுமென அப்போதய ஐ.நா. செயலாளர் நாயகம், சந்திரிகா அரசைக் கேட்டபோது, உள்நாட்டு விவகாரங்களில் ஐ.நா தலையிடக்கூடாதென வெளியுறவு அமைச்சராக இருந்த அமரர் லக்ஸ்மன் கதிர்காமர் எச்சரிக்கை விடுத்திருந்தார். 2006 இல் கொழும்பில் இருந்த அப்பலோ மருத்துவ மனையின் கூடுதல் பங்குகளை இலங்கை சர்வதேச விதிகளையும் மீறிப் பெற்றமை தொடர்பாக அப்போதைய இந்தியத் தூதுவர் நிருபன் சென் விளக்கம் கேட்டபோது அவமானப்படுத்தப்பட்டார்–

-அ.நிக்ஸன்-

ஈழத்தமிழர் விவகாரத்தை அமெரிக்க இந்திய அரசுகள் எப்படி கையாளுகின்றன என்பது பற்றிய விளக்கங்கள், அதனை மாற்றியமைக்க வேண்டிய வழிமுறைகள், இப் பத்தியில் ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டது. ஆனாலும் தமிழ்த்தேசியக் கட்சிகள் இதுவரையும் ஒரே குரலில் பேசுவதற்கான புள்ளியில் வருவதாக இல்லை. சிங்கள ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை ஆட்சி மாறினாலும் ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் ஒரு குரலில் பேசுகின்றனர்.

முன்னைய ஆட்சியாளர்கள் அணுகிய இராஜதந்திரத்தைப் புதிய ஆட்சியாளர்கள் தொடரும் பண்பு, ஜே.ஆர்.ஜயவர்த்தன காலத்தில் இருந்து வருகின்றது என்பதற்குப் பல உதாரணங்கள் உண்டு.

அரசியல் யாப்பு உருவாக்கங்கள் ஆகட்டும் சட்டத் திருத்தங்களாகட்டும் எல்லாமே ஈழத்தமிழர்களை நோக்கியது என்றால், கட்சி வேறுபாடுகளின்றியும், செயற்பாட்டுத் திறன் மிக்கவர்களை கட்சி வேறுபாடுகளுக்கப்பால் பயன்படுத்தும் உத்திகளும் பெரியளவில் மாறுபடுவதில்லை.

சமாதானப் பேச்சுக்காலத்தில் ரணில் அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்த மிலிந்த மொறகொட, மகிந்த சமரசிங்க, பேராசியர் பீரிஸ் ஆகியோரை ராஜபக்ச அரசாங்கம் பயன்படுத்திய முறையும் 2015இல் ரணில் அரசாங்கம் ஜெனீவாச் சூட்டைத் தணியவைத்த பரம இரகசியமும் சில உதாரணங்களாகும்.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பான விவாதம் வேறு வடிவத்தில் முன்வைக்கப்படவுள்ளது. இதனை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பாகக் கடந்த செப்ரெம்பர் மாதம் முதல் இலங்கையின் மூத்த இராஜதந்திரிகள் பலர் ஆலோசித்து வருகின்றனர்.

இந்தோ- பசுபிக் பாதுகாப்பு விவகாரம் மற்றும் தென்சீனக்கடல் விவகாரம் பற்றி அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நாடுகள் மற்றும் இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளினால் விவாதிக்கப்படும் சூழலில், இலங்கை எந்தப் பக்கம் என்ற கேள்வி எழுகின்றது.

அமெரிக்க, இந்திய நிகழ்ச்சி நிரலுக்கு மாறாக இலங்கை இயங்கக்கூடிய ஏது நிலையும் குறிப்பாகச் சீனாவின் பக்கம் இலங்கை சாயும் என்ற கதைகளும் சில தமிழ்த் தேசியக் கட்சிகளிடம் உண்டு.

ஆனால் ஈழத்தமிழர்களின் விவகாரம் சிங்கள ஆட்சியாளர்கள் நினைப்பது போன்று, இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குள் கரைந்துவிடும் என்பது உறுதியென்றால் மாத்திரமே, இலங்கை சீனாவின் பக்கம் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். அதற்கேற்ப மூன்று வகையான அணுகுமுறைகளை இங்கே காணலாம்.

ஒன்று- மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா கூட்டத்தைப் பயன்படுத்தி இலங்கையை அமெரிக்க இந்திய அரசுகள் அச்சுறுத்துகின்றமை.

இரண்டாவது- யாழ் திண்ணைப் பேச்சு

மூன்றாவது-அமெரிக்கச் சந்திப்புகள்.

இரண்டாவது மூன்றாவது அணுகுமுறைகளை அமொிக்க- இந்திய அரசுகள் மூலமாக இலங்கை கையாளுகின்றது. அதாவது ஜெனீவா விவகாரம் அல்லது இன அழிப்புப் பற்றிய பேச்சுக்கள் சில சமயங்களில் மேலெழுந்தால், அதனைத் தணிக்கும் உத்திகளே அவை.

இந்த இரு அணுகுமுறைகளும் வெவ்வேறு முனைகளில் சென்றாலும், தற்போது நடைமுறையில் உள்ள இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புடன் அல்லது புதிய யாப்புடன் ஈழத் தமிழர்களைக் கரைத்துவிடுவதற்கான ஏற்பாடுகள்தான் என்பது வெளிப்படை.

இங்கே சிங்கள ஆட்சியாளர்கள் விரும்புவது போன்று ஈழத்தமிழர்களைக் கையாண்டால், இலங்கையைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம் என்ற நம்பிக்கையோடுதான், அமெரிக்க- இந்திய அரசுகள் இலங்கையின் மேற்படி இரு அணுகுமுறைகளையும் கையில் எடுத்திருக்கின்றன.

அதாவது இலங்கையை அமெரிக்க- இந்திய அரசுகள் நம்புகின்றன. இப்படித்தான் 2009 ஆம் ஆண்டு இறுதிப் போருக்கு அமெரிக்க- இந்திய அரசுகள் ஏன் சீனா உள்ளிட்ட வேறு வல்லாதிக்க நாடுகளும்  இலங்கைக்குக் உதவியளித்திருந்தன.

ஏட்டிக்குப் போட்டியாக வழங்கப்பட்ட அத்தனை உதவிகளையும் பயன்படுத்திப் போரை இல்லாதொழித்த பின்னரான சூழலில், இலங்கை, இன்றுவரை சீனாவுடன் குறைந்தது ஏழு அபிவிருத்தித் திட்டங்களுக்குரிய ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டிருக்கினறது. மேலும் சில ஒப்பந்தங்கள் சீன நிறுவனங்களோடு செய்யப்பட்டுமிருக்கின்றன.

ஆனால் இலங்கையின் இந்த ஏமாற்று இராஜதந்திரம், அமெரிக்க இந்திய அரசுகளுக்கு ஏன் புரிவதில்லை என்ற சந்தேகங்கள் வலுக்கின்றன. அத்துடன் இலங்கை சிறியதொரு நாடு என்ற எண்ணக்கருவுடன் செயற்பட்டு, இலங்கையின் இறைமை, ஆள்புல ஒற்றுமையின் அவசியம் என்று மாத்திரம் பேசுவதால், இலங்கைத்தீவில் வசிக்கும் தமிழ்- முஸ்லிம் சமூகங்கள் வஞ்சிக்கப்படுகின்றன என்பதையும் அமெரிக்க இந்திய அரசுகள் புரிந்துகொள்வதில்லையா என்ற பரிதாபமான கேள்விகளும் உண்டு.

13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தத் தயாராக இருப்பதாகவும் தமிழ்த்தேசியக் கட்சிகள் அதனை ஏற்க வேண்டுமெனவும் இலங்கை 2015 ஆம் ஆண்டு அமெரிக்க இந்திய அரசுகளுக்கு உறுதியளித்தது. அதுமாத்திரமல்ல 2010/14 ஆம் ஆண்டுகளில் 13 பிளஸ் என அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியாவுக்கு வழங்கிய உறுதிமொழி போன்றவற்றை மையப்படுத்தியே சில மாதங்களுக்கு முன்னர் கொழும்புக்கு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கஸ்வர்த்தன சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் வலியுறுத்தியதாகத் தெரிகின்றது.

இது பற்றிச் சிங்களச் செய்தியாளர் ஒருவரிடம் கூறியுள்ளார். சட்டத்தரணி சுமந்திரன் குழுவின் அமெரிக்கப் பயணம், யாழ் திண்ணைப் பேச்சுக்கள் குறித்து அந்தச் சிங்களச் செய்தியாளர் கேட்டிருக்கிறார். இதற்குப் பதிலளித்தபோதே கஸ்வர்த்தன கூறிச் சென்ற விடயத்தை அமைச்சர் ரமேஸ் பத்திரன அதிகாரபூர்வமற்ற முறையில் வெளிப்படுத்தியதாக அறிய முடிகின்றது.

தமிழ்த்தேசியக் கட்சிகள் கூடிப் பேசட்டும். ஆனால் புதிய யாப்பில் 13 ஆவது திருத்தச் சட்டம் மாற்றப்படலாமெனவும் அந்தச் செய்தியாளரிடம் கூறியதாகவும் தெரியவருகின்றது. அதேவேளை 13 பற்றிப் பேச வேண்டாமென ஜனாதிபதியின் தரப்பு தமக்குத் தனிப்பட்ட முறையில் கூறியதாக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல, சென்ற புதன்கிழமை நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்தியிருக்கிறார்.

ஆகவே இந்த இரு தகவல்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால், ராஜபக்ச அரசாங்கத்தின் இரட்டை வேடம் வெளிப்படுகின்றது.

ஒரு புறத்தில் 13 பற்றி தமிழ்த்தேசியக் கட்சிகள் ஒரு நிலைப்பாட்டிற்கு வரட்டும். அதற்கு ஒத்துழையுங்களென்று அமெரிக்க- இந்திய அரசுகளுக்கும்,  மறுபுறத்தில் 13 இல்லை  புதிய யாப்பின் பிரகாரமே அனைத்தும் கையாளப்படும் என்று சிங்கள எதிர்க் கட்சிகளிடமும் அரசாங்கம் சொல்லியிருக்கின்றது.

கடந்தவாரம் முழுவதும் கொழும்பில் வெளிவந்த சிங்கள நாளேடுகளை அவதானித்தால், புதிய அரசியல் யாப்புப் பற்றியும் உள்ளூராட்சி சபைகளின் எல்லை மீள் நிர்ணயம் முடிவடைந்த பின்னரே மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படுமெனவும் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. ஆங்கிலப் பத்திரிகைகள் 13ஐ ஆதரிப்பது போன்றதொரு தொனியில் கட்டுரைகள், செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தன.

ஆனாலும் காணி, பொலிஸ் அதிகாரங்கள், தொல்பொருட்களைக் கையாளும் விடயங்கள் கொழும்பில் இருக்க வேண்டுமென்ற கருத்துக்களும் முன்வைக்கப்பட்டிருந்தன.

13 ஐ ஏற்க முடியாதென ஜனாதிபதியின் தரப்புத் தம்மிடம் தனிப்பட்ட முறையில் கூறியதாக லக்ஸ்மன் கிரியெல்ல நாடாளுமன்றத்தில் கூறிய விடயம், ஆங்கில நாளேடுகளில் வெளிவரவில்லை. அந்தச் செய்தி சிங்கள நாளேடு ஒன்றில் முக்கியம் பெற்றிருந்தது. தமிழ் நாளேடுகள் அந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், லக்ஸ்மன் கிரியெல்லவின் உரைக்கு வேறு தலைப்பிட்டிருந்தன.

ஆகவே ஈழத்தமிழர் விவகாரத்தில் சர்வதேச சமூகத்தை இடது கையாலும்  சிங்கள மக்களைத் திருப்திப்படுத்த வலது கையாலும் அணுகும் பண்பு சிங்கள ஆட்சியாளர்களிடம் 1983 ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இருந்தது. (அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளும் இந்தியாவும் இலங்கையோடு சேர்ந்து தமிழ்மக்களை ஏமாற்றிய சந்தர்ப்பங்களே அதிகம்)

இலங்கை தங்களை ஏமாற்றுவது, அவமானப்படுத்துவது தொடர்பாகக் கொழும்பில் உள்ள அமெரிக்க, இந்தியத் தூதுவர்கள் அறியாமல் இருப்பதாகக் கூற முடியாது. 1987 இல் கொழும்பில் நடைபெற்ற அணிவகுப்பின்போது பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொலை செய்ய முற்பட்டனர். 1995 ஆம் ஆண்டு இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியபோது, பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் குறித்துக் கருத்து வெளியிட்டிருந்த கொழும்பில் இருந்த பிரித்தானியத் தூதுவர் அவமானப்படுத்தப்பட்டார்.

இலங்கை இராணுவம் பொதுமக்களைத் துன்புறுத்தாமல், போர் விதிகள் பின்பற்றப்பட வேண்டுமென அப்போதிருந்த ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பூட்ரஸ் பூட்ரஸ்காலி சந்திரிகா அரசாங்கத்தைக் கேட்டபோது, உள்நாட்டு விவகாரங்களில் ஐ.நா தலையிடக்கூடாதென அப்போதிருந்த வெளியுறவு அமைச்சர் அமரர் லக்ஸ்மன் கதிர்காமர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

2006 ஆம் ஆண்டு கொழும்பில் இருந்த இந்திய அப்பலோ மருத்துவ மனையின் கூடுதல் பங்குகளை இலங்கை சர்வதேச விதிகளையும் மீறிப் பெற்றமை தொடர்பாக அப்போதைய இந்தியத் தூதுவர் நிருபன் சென் விளக்கம் கோரியிருந்தார்.

அதனால் அப்போது அமைச்சராக இருந்த அமார் அனுரா பண்டாரநாயக்கா தூதுவர் நிருபன் சென்னை நாடாளுமன்ற உரையின்போது அவமானப்படுத்தினார். அப்பலோ மருத்துவ மனைக்கு இலங்கை பெயர் மாற்றியமை தொடர்பாகப் பெரும் சர்ச்சை எழுந்தது. இறுதியில் இலங்கையே வெற்றிகொண்டது.

கொழும்புத் துறைமுக கிழக்கு முனைய அபிவிருத்தி ஒப்பந்தம், அமெரிக்க மிலேனியம் சவால்கள் உள்ளிட்ட பல சர்வதேச ஒப்பந்தங்கள் இலங்கையினால் நிராகரிக்கப்பட்டன. இப்படிப் பல ஏமாற்றுகள் நடந்தும், இன்றுவரை இலங்கையை நம்புகின்ற போக்கும், ஈழத்தமிழர் விவகாரத்தை இலங்கை ஒற்றையாட்சிக்குள்ளேயே முடக்கி விடுவதற்கான ஏற்பாடுகளிலும் அமெரிக்க- இந்திய அரசுகள் ஏன் ஈடுபடுகின்றன?

ஜெனீவாவைக் காண்பித்து இலங்கையை மிரட்டுகிறார்களே தவிர, பாதிக்கப்பட்ட மக்களின் சுயநிர்ணய உரிமை பற்றியோ அல்லது வடக்குக் கிழக்கில் வேகமாக இடம்பெற்று வரும் சிங்களக் குடியேற்றங்கள் குறித்தோ இதுவரை கண்டன அறிக்கைகூட வெளியாகவில்லை. 2012 ஆம் ஆண்டில் இருந்து இந்த ஆண்டு வரை நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைக்கூட  இலங்கை உரிய முறையில் அமுல்படுத்தவில்லை.

இவ்வாறு சர்வதேசத் தீர்மானங்கள், ஒப்பந்தங்களை மீறுகின்ற இலங்கையைத் தண்டிக்க முடியாத அமெரிக்க- இந்திய அரசுகள், 13 ஐ இலங்கை நடைமுறைப்படுத்தும் என்று எப்படி நம்புகின்றன? 2009 ஆம் ஆண்டு போர் இல்லாதொழிக்கப்பட்டதும் நிரந்த அரசியல் தீர்வு என்று மகிந்த ராஜபக்ச அப்போது அமெரிக்க, இந்திய அரசுகளிடம் உறுதியளித்திருந்தார்.

இந்த விடயத்தைக் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் சம்பந்தன் வெளிப்படுத்தியிருந்தார். அமெரிக்க- இந்தியத் தூதுவர்களின் கதையைக் கேட்டுத் தானும் நம்பியதாகவும் அமெரிக்காவும் இந்தியாவும் தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டதாகவும் சம்பந்தன் கவலையும் வெளியிட்டிருந்தார்.

ஆகவே இதன் பின்னணியை நோக்கினால் அமெரிக்கப் பேச்சும், யாழ் திண்ணைச் சந்திப்பும் எந்த அடிப்படையில் சாத்தியமாகும்? 2009இல் போர் இல்லாதொழிக்கப்பட்டுப் பின்னர் நிரந்த அரசியல் தீர்வு என்று வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றாமலும், இந்தோ- பசுபிக் பாதுகாப்பு விடயத்தில் இன்னமும் முழுமையாக தங்களோடு இலங்கை இல்லையென்று தெரிந்தும், 13 என்ற மற்றுமொரு உறுதிமொழியை நம்புகின்றன இந்த அமெரிக்க- இந்திய அரசுகள்.

அமெரிக்காவோடும் இந்தியாவோடும் இலங்கை நிற்பதாகக் காட்டிக்கொள்ளப்படும் சமிக்ஞையின் உண்மைத்தன்மை எதுவரை என்பதை அறிந்துகொள்வதற்குப் 13 பரிசோதனை எலியாக மாற்றப்பட்டுள்ளது.

ஆனால் இந்தப் பரிசோதனையை முறையைக் கைவிட்டு ஈழத்தமிழர் விவகாரத்தை சர்வதேசம் முழுமையாகக் கையில் எடுக்குமானால், வேறு வழியின்றி சிங்கள ஆட்சியாளர்கள் ஏமாற்றும் இராஜதந்திரத்தைக் கைவிடுவார்கள். அதற்கான சூழல் உண்டு.

வடக்குக் கிழக்கு இணைந்த சுயாட்சிக் கட்டமைப்பை (North East Combined Autonomous Structure) உருவாக்குவதில் தமிழ்த்தேசியக் கட்சிகள் ஒரே குரலில் ஒன்றித்து, முஸ்லிம் கட்சிகளையும் இணைத்துக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லாமலில்லை. அதற்கான தமிழ் இராஜதந்திரிகள் யார்? மூளையை விற்பனை செய்யும் வியாபாரிகள் ஒற்றையாட்சிக்கே பணியாற்றுவார்கள். அத்துடன் அமெரிக்க- இந்திய அரசுகள் சொல்வதற்கு மாத்திரமே தலையும் ஆட்டுவார்கள்.