செய்திகள்

”குழந்தைகளுக்கு சுற்றுச்சூழலை அனுபவிக்க இடமளியுங்கள்”: பிரதமர்

முன்பள்ளிகளை போட்டித்தன்மை மிகுந்த கல்வி வழங்கும் மற்றொரு பாடசாலையாக மாற்றாமல் குழந்தைகளுக்கு சுற்றுச்சூழலை அனுபவிக்க இடமளியுங்கள் என பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பு அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 2500 ரூபாய் கொடுப்பனவை பெற்றுக்கொடுக்கும் ‘குரு அபிமானி’ தேசிய நிகழ்விலேயே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.
கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, அறநெறிப் பாடசாலைகள், கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த ஆகியோர் இதன்போது ஆரம்பகால குழந்தை பருவ கல்வி குறித்த தேசிய கொள்கைத் திட்டத்தை பிரதமரிடம் கையளித்தனர்.

குரு அபிமானி தேசிய வேலைத்திட்டத்தை மையமாகக் கொண்டு முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பிரதமர் மற்றும் பிரதமரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்‌ஷ ஆகியோரினால் இதன்போது கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.

சுபீட்சத்தின் நோக்கு திட்டத்திற்கமைய அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலும் நிறுவப்பட்டுள்ள சுபீட்சத்தின் முன்பள்ளி கட்டுமானத்திற்கான 25 இலட்சம் ரூபாய் மற்றும் 1500 முன்பள்ளிகளின் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக 6 இலட்சம் ரூபாய் நிதி வழங்கலும் இதன்போது இடம்பெற்றது.

முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, அறநெறிப் பாடசாலைகள், கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் கீழ் இவ்வேலைத்திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், முழு நாடும் கொரோனா தொற்றுநோயை எதிர்கொள்ளும் நேரத்தில் முன்பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான முன்பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளின் பெற்றோரிடமிருந்து குறைந்த பணத்துடன் பராமரிக்கப்படுகிறார்கள். தற்போது அப்பணம் கிடைப்பதில்லை. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, இந்த முன்பள்ளி ஆசிரியரை ஒரு நிரந்தர சம்பளம் பெறும் தொழில்முறை நிலைக்கு கொண்டு வர முயற்சிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

முன்பள்ளி ஆசிரியர் ஒரு மேசை அல்லது நாற்காலிக்கு மட்டுப்படுத்தப்படவில்லை. குழந்தைகளுடன் ஓடி குதிக்க வேண்டும். விளையாட வேண்டும். இன்று அவர்கள் இப்படி இருந்தாலும், ஒரு நாள் அவர்களால் ஓடவும் குதிக்கவும் முடியாது. அவர்கள் உண்மையிலேயே உதவியற்றவர்களாக மாறுகின்றனர். அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைப்பதில்லை. வேறு சலுகைகள் இல்லை.

2014 வரவுசெலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டபோது, நிதி அமைச்சராகவும், ஜனாதிபதியாகவும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதத்திற்கு ரூ. 2,500 கொடுப்பனவு வழங்க முன்மொழிந்தேன். அந்நேரத்தில் படிப்படியாக அந்த தொகையை அதிகரித்து, முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அங்கீகாரம் கொண்டு வந்து சமூகத்தில் ஒரு சிறந்த இடத்திற்கு கொண்டு வருவோம் என்று நம்பினோம்.

நாங்கள் தேர்தலில் தோற்றபோது அந்த விடயங்களுக்கு என்ன நடந்தது என்பதை என்னை விட உங்களுக்கு நன்றாக தெரியும். 2015 ல் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம், முன்பள்ளி ஆசிரியர்களுக்காக நாங்கள் விட்டுச்சென்ற முயற்சியை முன்னெடுத்துச் செல்லும் என்று நாங்கள் நினைத்தோம்.

இருப்பினும், அவர்கள் முன்பள்ளி ஆசிரியரை குறைத்து மதிப்பிட்டு, மாதாந்த கொடுப்பனவு ரூ. 2,500 ஐ ரூ .250 ஆக குறைத்தனர். அது எங்களுடனான கோபத்தினாலா என்பது தெரியாது.

250 ரூபாயை கொண்டு என்ன செய்ய முடியும்? அது வேடிக்கையானது. அந்தப் பணத்தைப் பெற பிரதேச செயலகத்திற்குச் செல்ல அதிக செலவு ஆகும். இன்று நாம் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 10 மடங்கு அதிகம் தருகிறோம்.

நாங்கள் சம்பளம் கொடுக்கவில்லை. அது ஒரு கொடுப்பனவு. இந்த பணம் வாழ போதுமானதாக இல்லை என்பதை நாங்கள் அறிவோம். முறையான பயிற்சிக்குப் பின்னர் முன்பள்ளி ஆசிரியருக்கு நிரந்தர மாத சம்பளத்தை அமைப்பதற்கான ஆரம்பம் இதுதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இந்த உதவித்தொகையைப் பெற 25,000 க்கும் மேற்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் ஏற்கனவே தகுதி பெற்றுள்ளனர் என்று இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த தெரிவித்தார். ஆனால் இந்த கொடுப்பனவைப் பெற முன்பள்ளி ஆசிரியர்கள் அதிகம் உள்ளனர். தகுதி உள்ளவர்களுக்கு இந்த கொடுப்பனவை வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நம்புகிறேன்.

நாட்டின் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுக்கும் 24 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள முன்மாதிரியான தரப்படுத்தப்பட்ட முன்பள்ளியை வழங்குவதே எங்கள் குறிக்கோள். அது மட்டுமல்லாமல், முன்பள்ளிகளை நாங்கள் தனித்தனியாகப் ஆராய்ந்து பார்க்கிறோம். குறைந்தபட்ச வசதிகளுடன் கூடிய முன்பள்ளிகளை அடையாளம் கண்டு அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

கொவிட் நிலையைக் கருத்தில் கொண்டு, அந்த குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப தொலைக்காட்சியால் ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான சாத்தியம் குறித்து சமீபத்தில் கல்வி அமைச்சர் மற்றும் செயலாளருடன் விவாதித்தோம். இது தொடர்பாக சுகாதார அமைச்சின் பரிந்துரைகளை வழங்கியவுடன் படிப்படியாக பாடசாலைகளை மீண்டும் திறப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

முன்பள்ளிகளை மீண்டும் தொடங்கும் போது, அந்த மலர்களைப் போன்ற குழந்தைகள் உங்களிடம் திரும்பி வருவார்கள். குழந்தைகளுக்காக வேலை செய்யும் உங்களிடம் ஒரு சிறிய கோரிக்கையை வைக்க விரும்புகிறேன்.

முன்பள்ளியை போட்டி கல்வியை வழங்கும் மற்றொரு பாடசாலையாக மாற்ற வேண்டாம். இந்த சூழலை குழந்தைகள் அனுபவிக்கட்டும். அவர்கள் தங்கள் உலகில் வாழட்டும். ஒருவேளை இந்த குழந்தைகளிடையே சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகள் இருக்கலாம். அவர்களையும் கவனித்துக் கொள்ளுங்கள். அந்த குழந்தைகள் நல்லொழுக்கம், மற்றும் இரக்கம் பற்றி அறிய முன்பள்ளியை ஒரு புகலிடமாக மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.

குறித்த சந்தர்ப்பத்தில் பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ, அமைச்சர்களான பேராசிரியர் G.L.பீரிஸ், காமினி லொகுகே, இராஜாங்க அமைச்சர்களான பியல் நிசாந்த, சுசில் பிரேமஜயந்த, வஜித பேருகொட, பாராளுமன்ற உறுப்பினர்களான சாகர காரியவசம், கொரிய தூதுவர் வுன்ஜின் ஜியோங், பிரதமரின் செயலாளர் காமினி செனரத், கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, இராஜாங்க அமைச்சின் செயலாளர் K.M.S.T.ஜயசேகர உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
-(3)