செய்திகள்

கூட்டணி அரசை உருவாக்குவதே எங்கள் இலக்கு! திருமாவளவன் அதிரடி

2016 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அரசை உருவாக்குவதே விடுதலை சிறுத்தைகளின் இலக்கு என்று திருமாவளவன் பேசி உள்ளார்.

அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை பெரியார் திடலில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு தொல்.திருமாவளவன் பேசும்போது, ”தலித்துகளுக்கும், தலித் அல்லாதோருக்கும் இடையே நல்லிணக்கத்தை வளர்த்தெடுப்பதும் சமூக ஒற்றுமையைக் கட்டி எழுப்புவதுமே இந்த விழாவின் நோக்கமாகும்.

சாதி அமைப்புகள், ஒவ்வொரு சமூகத்தையும் தனித்தனியே அணி திரட்டுவதால் சமூக உறவுகளைச் சிதைக்கின்றன. இதனால், தலித்துகளுக்கும், தலித் அல்லாத பிற சமூகத்தினருக்கும் இடையில் மட்டுமின்றி, தலித்தல்லாத ஒவ்வொரு சமூகத்தினருக்கிடையிலும் நல்லிணக்கமான உறவு பாதிக்கப்படுகிறது. வெறுப்பும் பகையும் மேலோங்குகிறது. காலம் காலமாக இத்தகைய போக்கு நீடித்து வருகிறது. ஒவ்வொரு சாதிக்கும் இடையில், சாதி உணர்வுகளாலான நெடிய பெருஞ்சுவர்கள் எழுப்பப்பட்டு உள்ளன.

விடுதலைச் சிறுத்தைகள், தமிழ் மொழிக்காகவும், தமிழினத்திற்காகவும், தமிழக உரிமைகளுக்காகவும் ஜனநாயகச் சக்திகளோடு இணைந்து களமாடி வருகிறது. ஈழத்தமிழர்களின் நலன்களுக்காகவும் உரத்துக்குரல் எழுப்பி வருகிறது. தமிழக மக்களின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஒருமித்த கருத்துள்ளவர்களோடு இணைந்து செயலாற்றி வருகிறது. தமிழகத்தில் ஒரு தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக விடுதலைச் சிறுத்தைகள் எழுச்சி பெற்றுள்ளது.

2016 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத்தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் மகத்தான பாத்திரம் வகிக்கும். விடுதலைச் சிறுத்தைகள் பங்கேற்கும் ‘கூட்டணி அரசை’ உருவாக்கிட உரிய முயற்சிகளை மேற்கொள்ளும். ‘ஒரு கட்சி அரசு’ என்னும் நிலையை மாற்றி, தமிழகத்தில் விளிம்புநிலை மக்களும் ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் வகையிலான ‘கூட்டணி அரசை’ அமைப்பதே விடுதலை சிறுத்தைகளின் அடுத்த இலக்கு” என்றார்.