செய்திகள்

கூட்டமைப்பு இன்று வவுனியாவில் கூடுகின்றது: ஆசன ஒதுக்கீடு குறித்து இறுதி முடிவு

பொதுத் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று இறுதிமுடிவெடுக்கவுள்ளது. ஆசன ஒதுக்கீடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் கூடி முடிவெடுக்கவுள்ளன.

இன்று காலை 10 மணிக்கு வவுனி யாவில் கூடவுள்ள கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் எதிர்வரும் தேர்தல் தொடர்பில் விரிவாக ஆராயவிருப்பதாக கூட்டமைப்பு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இக்கூட்டம் நடை பெறவுள்ளது. ஆசன பங்கீடு தொடர் பில் பங்காளிக் கட்சிகள் விரிவாக ஆராய்வதுடன், மாகாணசபை உறுப் பினர்களுக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் ஒருங் கிணைப்புக் குழுக் கூட்டமொன்றும் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டங்களில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர். யாழ் தேர்தல் மாவட்டத்தின் 7 ஆசனங்களுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உட்பட 10 பேர் போட்டியிடுகின்றனர்.

வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கு இடமளிக்கப்படாது எனத் தெரியவருகிறது. அதேநேரம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் மனைவிக்கு வேட்புமனு வழங்குவது பற்றி ஆராயப்பட்டுள்ளன. இவை அனைத்துக்கும் இன்றைய கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு மாத்திரமன்றி கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான இட ஒதுங்கீடுகள் பற்றியும் இன்றைய கூட்டத்தில் முடி வெடுக்கப்படவுள்ளது. தேசியப்பட்டி யலில் யார் யாரை உள்ளடக்குவது போன்ற விடயங்களும் ஆராயப்பட வுள்ளன.