செய்திகள்

கொலையாளிகள், குற்றவாளிகளை கைதுசெய்வதில் தாமதம் கூடாது: மட்டக்களப்பில் மாவை

“நல்லாட்சியான காலப்பகுதியில் அரசாங்கம் இவ்வாறான கொலைகள் மற்றும் வன்புணர்வுகள்,போதைப்பொருள் வியாபாரங்கள் தொடர்பில் விசாரணைகள் தாமதிப்பதை அனுமதிக்ககூடாது. எந்த தாமதமும் இன்றி கொலையாளிகளை,குற்றவாளிகளை கைதுசெய்ய அரசாங்கம் பொலிஸாருக்கு கட்டளைகளை இடவேண்டும்” என்று வலியுத்துவதாக தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்ப பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட மண்டூர் பகுதியில் கடந்த 26ஆம் திகதி சமூக சேவைகள் உத்தியோகத்தர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தினை கண்டித்தும் இதுவரையில் கொலையாளிகள் கைதுசெய்யப்படாததை கண்டித்தும் விரைவாக கொலையாளிகளை கைதுசெய்யக்கோரியும் மட்டக்களப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் கண்டன ஆர்ப்பாட்டமும் பேரணியும் நடாத்தப்பட்டது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

இன்று மட்டக்களப்பு நகரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டுள்ளது.ஒரு சமூகசேவைகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர் மர்மமான முறையில் படுகொலைசெய்யப்பட்டுள்ளார்.சமூகத்திற்காக உழைத்த,சமூக சீரழிவுக்கு எதிராக உழைத்த ஒரு உயர்தரத்தைபெற்ற அதிகாரியாக இருந்துள்ளார்.

அவர் படுகொலைசெய்யப்பட்டு இரண்டுவாரங்களைக்கடந்துவிட்ட நிலையிலும் பொலிஸார் கொலையாளிகளை கைதுசெய்யாமல் இருப்பது ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இன்று வடக்குகிழக்கில் இவ்வாறான கொலைகள் மட்டுமல்ல கற்பழிப்பு, வன்புணர்வு, போதைவஸ்து வியாபாரம் உட்பட பல சம்பவங்கள் நிறைந்துள்ளது.இவ்வாறானவர்கள் கைதுசெய்யப்பட்டு தண்டிக்கப்படவேண்டும் என ஜனாதிபதி,பிரதமர்,பொலிஸ்மா அதிபர் ஆகியோரிடம் வலியுறுத்தப்பட்டு பல போராட்டங்கள் நடாத்தப்பட்டுவருகின்றன.அதன் ஒரு அங்கமாக மட்டக்களப்பிலும் நடைபெற்ற சம்பவத்தினை கண்டித்தும் கொலைகளை கைதுசெய்யுமாறும் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டுள்ளது.

நல்லாட்சியான காலப்பகுதியில் அரசாங்கம் இவ்வாறான கொலைகள் மற்றும் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் தாமதிப்பதை அனுமதிக்ககூடாது.எந்த தாமதமும் இன்றில் கொலையாளிகள் கைதுசெய்யப்படுவதை அரசாங்கம் பொலிஸாருக்கு கட்டளைகளை இடவேண்டும் என வற்புறுத்தி கோரிக்கைவிடுக்கின்றோம்.

மக்கள் இந்த சம்பவம் தொடர்பில் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபடாமல் இருக்கச் செய்யவேண்டுமானால் கொலையாளிகள் கைதுசெய்யப்படவேண்டும் என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.