செய்திகள்

கொழும்பில் ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கும் விழாவும் கௌரவிப்பு நிகழ்வும்

இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்  கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நாளை 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு ஊடகவியலாளர்களுக்கு விருதுவழங்கும் விழாவும் கௌரவிப்பு நிகழ்வுகளும் நடைபெறவுள்ளது.

40 வருடங்களுக்கு மேல் ஊடகத்துறையில் சேவையாற்றியுள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கலும்,  கௌரவிப்பும் இடம்பெறுவதுடன்,   வடக்கு, கிழக்கு, மலையகம், மேல் மாகாணத்தைச் சேர்ந்த ஏனைய 46 ஊடகவியலளார்களுக்கு ஊக்குவிப்பு உபகரண உதவிகள் வழங்கப்படவுள்ளன. அத்துடன் சிறப்பு நிகழ்வாக முருகேஷ் குழுவினரின் இசைநிகழ்வும்(கண்ணதாசனின் தத்துவப் பாடல்கள்) நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வு ஊடகவியலாளர் அ.நிக்ஸன் தலைமையில் இடம்பெறவுள்ளதுடன் பிரதம விருந்தினராக அதிவண பிதா இராயப்பு ஜோசப் (ஆயர் மன்னார் மறை மாவட்டம்) மற்றும் சிறப்பு விருந்தினர்களாக மனோ கணேசன்( ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர்), எம்.ஏ.சுமந்திரன்(பாராளுமன்ற உறுப்பினர்) மற்றும் கௌரவ விருந்தினர்களாக ப.திகாம்பரம்(அமைச்சர்),சீனித்தம்பி யோகேஸ்வரன்(பாராளுமன்ற உறுப்பினர்) ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றுவதுடன், சிறப்பு சொற்பொழிவை பேராசியர் சபா.ஜெயராஜா, புதிய  “ஊடகங்களின் வருகையும் பாரம்பரிய ஊடகங்களின் நிலையும்’ என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தவுள்ளார்.

இந்நிகழ்வில் நாடு பூராகவுள்ள ஒன்றியத்தின் உறுப்பினர்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு  இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் கே.ஜெயேந்திரன் கேட்டுள்ளார்.