செய்திகள்

கோண்டாவிலில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் பெரும் முறுகல் நிலை (நேரடி றிப்போர்ட்)

யாழ்.கோண்டாவில் டிப்போவுக்கு அருகில் இன்று செவ்வாய்க்கிழமை(05.5.2015) காலை வேகமாக வந்த தனியார் பிஸ்கட் கம்பனிக்குச் சொந்தமான கன்ரர் 350 ரக வாகனம் கடுமையாக மோதித் தள்ளியதில் பலாலி வீதியின் ஓரமாகக் கதைத்துக் கொண்டிருந்த இருவரில் ஒருவரான குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பலியானார்.குறித்த வாகனம் டிப்போவின் வேலியைப் பிய்த்துக் கொண்டு உள்ளே சென்ற நிலையில் அப் பகுதியில் காணப்பட்ட மின்கம்பமும் சுக்கு நூறாகியதுடன் கன்ரர் வாகனமும் கடுமையாகச் சேதமடைந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,இன்று காலை 10 மணிக்கு கோண்டாவில் டிப்போவுக்கு அண்மையிலுள்ள உணவகமொன்றில் ட்ரக்டரை நிறுத்தி விட்டு எதிர்ப்பக்கமாக வீதியின் ஓரமாக நின்று தனது சகோதரனுடன் கதைத்த பின்னர் சிறிது தூரம் தான் சென்றிருப்பார்.அப்போது யாழ்ப்பாணத்திலிருந்து பலாலி நோக்கி வேகமாக வந்த கன்ரர் வாகனம் அப்பகுதியில் பயணிகளை இறக்கிக் கொண்டிருந்த மினிபஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்டது.இதன் போது அப் பகுதியில் நின்ற யாழ்ப்பாணப் போக்குவரத்துப் பொலிஸார் குறித்த கன்ரர் வாகனத்தைத் தடுத்து நிறுத்தினர்.இதனால் நிலை குலைந்த வாகனச் சாரதி வேகத்தைக் கட்டுப்படுத்த முயன்ற போதும் அது பலனளிக்காது போகவே மறுபக்கமாக நின்ற குடும்பஸ்தரை மோதித் தள்ளியதாகவும்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் உரும்பிராய் தெற்கைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையும்,முன்னாள் இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்ஸின் சாரதியுமான சீனியர் ஞானசேகரம்(வயது-53) என்பவரே பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.இறந்தவரின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.  குறித்த விபத்துச் சம்பவத்தையடுத்து அப் பகுதியில் ஒன்று கூடிய பொதுமக்களுக்கும்,பொலிஸாருக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.விபத்துக்குக் காரணமான கன்ரர் வாகனத்தைப் பொலிஸ் நிலையம் எடுத்துச்செல்ல முற்பட்ட பொலிஸாருடன் பொதுமக்கள் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.இதன் போது கோப்பாய்ப் பொலிஸார் கன்ரர் வாகனச் சாரதி பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த சிங்களவர் என்பதால் பக்கச் சார்பாகச் செயற்படுவதாகவும், பலாலிப் பக்கமாகவிருந்து யாழ்ப்பாணம் நோக்கிக் கன்ரர் வாகனம் பயணித்ததாக கதை சோடிக்க முற்படுவதாகவும் குற்றம்சாட்டினர்.அத்துடன் சம்பவத்துக்குக் காரணமான வாகனச் சாரதி உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டுமெனவும்,சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணைகள் இடம்பெற வேண்டுமெனவும் பொதுமக்கள் வலியுறுத்திக் கூறினர்.கன்ரரைச் செல்ல விடாது கற்கள் போட்டும்,அதனைச் சூழ்ந்து நின்றும் தடுத்தனர்.அதனையும் மீறிக் கொண்டு செல்ல முற்பட்ட போது கன்ரர் வாகனத்தின் மீது இனந்தெரியாதவர்களால் பெற்றோல் வீசப்பட்டது.இதனையடுத்து நிலைமை மிகவும் மோசமடைந்தது.பின்னர் பொலிஸாரும் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடாத்திய பின் கன்ரர் விபத்து இடம்பெற்ற பகுதியிலேயே விடப்படுமெனப் பொலிஸார் உறுதியளித்தனர்.ஆனால் அதனை மீறிப் பொலிஸார் செயற்பட்ட நிலையில் கன்ரரை எடுத்துச் செல்ல விடாது பொதுமக்கள் வீதியின் குறுக்காக விழுந்து கிடந்தனர்.

இதனையடுத்துப் பெருமளவான பொலிஸார்; பொலிஸ் உடையிலும் சிவில் உடையிலும் குவிக்கப்பட்டதுடன் அவர்கள் பொல்லுகளைக் காட்டிப் பொதுமக்களைக் கலைந்து செல்லுமாறும் அச்சுறுத்தினர்.சி.ஜ.டியினரும் பொலிஸாரும் அங்கு கூடியிருந்த பொதுமக்களையும்,ஊடகவியலாளர்களையும் படமெடுத்ததுடன் பொலிஸாரொருவர் அங்கு செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளரொருவரையும் அச்சுறுத்தினார்.இந்த நிலையில் அப் பகுதிக்கு விரைந்த கோப்பாய்ப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி விபத்துக்குக் காரணமானவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாகவும்,சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் நடாத்தப்படுமெனவும் உறுதியளித்தார்.இதனையடுத்துப் பொதுமக்கள் கன்ரர் வாகனத்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல அனுமதித்தனர்.இருந்த போதும் அதன்பின்னரும் அப் பகுதியில் பதற்றமான சூழ்நிலையே காணப்பட்டது.சம்பவத்தையடுத்து மின்சார வயர் பலாலி வீதியன் குறுக்காக விழுந்து காணப்பட்டமையாலும்,பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் முறுகல் நிலை காணப்பட்டமையாலும் சில மணி நேரங்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதன் போது கலந்து கொண்ட பொதுமக்கள் சிங்களப் பகுதியில் இவ்வாறான கோரமான விபத்துச் சம்பவம் ஏற்பட்டால் நீங்கள் கண்கட்டி வேடிக்கை பார்ப்பீர்களா?எனப் பொலிஸாரைப் பார்த்துக் கேட்டனர்.சிங்களவருக்கு ஒரு நீதி?தமிழருக்கு ஒரு நீதியா?எனவும் கோஷமெழுப்பினர்.சம்பவத்துடன் தொடர்புடையவர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டுமெனவும்,பொலிஸார் இவ்விடயத்தில் நீதியான விசாரணைகள் நடாத்துவார்கள் என்பது சந்தேகமெனவும் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.  யாழ்.நகர் நிருபர்-

IMG_2978 IMG_2980 IMG_2981 IMG_3001 IMG_3005 IMG_3008 IMG_3021 IMG_3026 IMG_3028 IMG_3030 (1) IMG_3030 IMG_3033 IMG_3034 (1) IMG_3034 IMG_3035 IMG_3036 IMG_3042 IMG_3048 IMG_3054 IMG_3060