செய்திகள்

கோவிட் ஓமைக்றோன் பரம்பலைத் தடுத்திடுவோம்

மருத்துவர் சி. யமுனாநந்தா

கொரோனாப் பெருந்தொற்றின் 2 வருட முடிவில் புதிய விகாரமுற்ற ஓமிக்றோன் திரிபின் தோற்றம் மருத்தவ சமூகத்தை மீளவும் விழிப்படைய வைத்துள்ளது.

தென் ஆபிரிக்காவில் அவதானிக்கப்பட்ட இவ்விகாரமுற்ற நுண்மி உலகினை மீளவும் முடக்க நிலைக்கு இட்டுச் செல்லலாம் என அச்சத்தினை ஏற்படுத்தி உள்ளது. புதிய விகாரமுற்ற நுண்மியினால் ஏற்கனவே கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு.

எனவே கொரோனாத் தொற்றுத் தடுப்பிற்கு ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளை நாம் தொடர்ந்து கடைப்பிடித்தல் அவசியம்.

முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளிபேணல், கைகளைச் சுத்தம் செய்தல் என்பன மிகவும் அத்தியாவசியமானவை. கோவிட் தடுப்பூசியினை 20 வயதிற்கு மேல் அனைவரும் கட்டாயமாகப் பெற்றுக் கொள்ளல் வேண்டும். ஏனெனில் இளவயதினர் கோவிட் தடுப்பூசியினைப் பெறுவதில் பின்னிற்பதால் இத்தொற்று தென்ஆபிரிக்காவில் இளவயதினரையே அதிகம் பாதித்துள்ளது. தடுப்பு மருந்து பெற்றுக்கொள்வது நோயின் தீவிரத்தன்மையைக் குறைக்கும்.

மேலும் கோவிட் தொற்றுக்கு எதிராக வருடாந்தம் பூஸ்டர் தடுப்பு மருந்து ஏற்றவேண்டிய அவசியத்தினையும், இப்புதிய திரிபடைந்த நுண்மி எமக்கு உறுதிப்படுத்தியுள்ளது. எனவே கோவிட் தொற்றுக்கு எதிராகத் தடுப்பு மருந்து ஏற்றத் தயங்கியவர்கள் தற்போது அத் தடுப்பு மருந்துகளைப் பெற்று கோவிட் தொற்றுக்கு எதிரான நிர்ப்பீடனத்தைப் பெறுவதற்காக பெற்றுக் கொள்ளல் அவசியம். மருத்துவசமூகமும் மாற்றமடையும் கோவிட் திரிபுக்கு ஏற்ப புதிய தடுப்பு மருந்துகளையும், நோய் நிவாரணி மருந்துகளையும் அவசர அவசரமாக உருவாக்க வேண்டிய நிலையில் உள்ளது. எனவே பொதுமக்கள் தமது சமூகப் பொறுப்பை உணர்ந்து கோவிட் பரம்பலைக் கட்டுப்படுத்த தம்மால் இயன்ற காப்பு நடவடிக்கைகளைக் கைக்கொள்ளல் வேண்டும். தேவையற்ற சுற்றுலாப்பயணங்கள், ஒன்றுகூடல்களைத் தவிர்த்தல் நல்லது.