செய்திகள்

சட்டரீதியான சுதந்திரக் கட்சி என்னுடனேயே உள்ளது: மகிந்த ராஜபக்‌ஷ சொல்கிறார்

சட்டரீதியான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தன்னுடனேயே இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்திருக்கின்றார். மதுருவெல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலேயே இன்று காலை இந்தக் கருத்துக்களை அவர் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக தன்னை நியமிக்க வேண்டும் என வலியுறுத்துவதற்காக கண்டியில் இன்று மாலை நடைபெறும் கூட்டத்துக்கு தான் அழைக்கப்பட்டிருப்பதாகவும் இங்கு மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

“இதில் நீங்கள் கலந்துகொள்வீர்களா?” எனக் கேட்கப்பட்டபோது அதற்கு நேரடியாகப் பதிலளிப்பதை மகிந்த ராஜபக்‌ஷ தவிர்த்துக்கொண்டார். தான் இப்போது திருமண நிகழ்வு ஒன்றுக்கு செல்வதாக மகிந்த தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள் இதில் கலந்துகொள்ளலாம் என்பதால், மற்றைய கட்சிகளால் ஏற்பாடு செய்யப்படும் கூட்டங்கள் எதிலும் தமது உறுப்பினர்கள் கலந்துகொள்ளக் கூடாது என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்கனவே தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.