செய்திகள்

சட்டவிரோத பிரச்சாரம் தொடர்வதாக குற்றச்சாட்டு: பவ்ரல் அமைப்பு குற்றச்சாட்டு

ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரத்துகான காலஎல்லை முடிந்த பிறகும் சட்டவிரோத தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் தொடர்வதாக தேர்தல் கண்காணிப்புக்கான பப்ரல் அமைப்பு இன்று குற்றச்சாட்டியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த காலஎல்லை நேற்றிரவுடன் முடிவடைந்துவிட்ட போதிலும் சட்டவிரோத தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக பப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இவ்வாறான பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அந்த அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோகன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் நேற்று திங்கட்கிழமை இரவு 12.00 மணியுடன் நிறுத்தப்பட வேண்டுமென்று தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

ஆயினும் இன்று செவ்வாய்க்கிழமையும் நாடு தழுவிய அளவில் சட்டவிரோத தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளதாக ரோகன ஹெட்டியாராச்சி ஊடகவியலாளர்களிடம் இன்று தெரிவித்தார்.

விஹாரைகள் மற்றும் தேவாலயங்களில் நடத்தப்படும் சமய நிகழ்வுகள் ஊடாக இந்த தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறிய ரோகண ஹெட்டியாராச்சி, அரசியல் வாதிகளின் விடுதிகளுக்கு மக்களை அழைத்து நடத்தப்படும் சிறிய கூட்டங்களின் முலம் பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

ஒரு பிரதான வேட்பாளருக்கு மாத்திரம் வாக்களிக்குமாறு சமுர்த்தி உதவியைப் பெற்று வரும் மக்கள் அச்சுறுத்தப்பட்டு வருவதாகவும் இவ்வாறான புகார் ஒன்று பலாங்கடை பகுதியிலிருந்து கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அதேபோன்று தேர்தல் பிரச்சார போஸ்டர்கள் தொடர்ந்தும் பல பகுதிகளில் ஓட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் கூறிய ரோகன ஹெட்டியாராச்சி, இவை சம்பந்தமாக தேர்தல்கள் ஆணையாளருக்கு முறைப்பாடுகளை சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை திவுலப்பிட்டி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பதாககைகளை அகற்றுவதற்காக சென்ற பிரதி தேர்தல் அதிகாரி ஒருவரை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அச்சுறுத்தியுள்ளதாக கூறிய பப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோகன ஹெட்டியாராச்சி இவ்வாறான செயல்களின் முலம் நியாயமான தேர்தலொன்றை நடத்துவதற்கு பாதிப்புகள் ஏற்படலாமென்றும் குற்றம்சாட்டினார்.

சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சார நடவடிக்கைகள் குறித்து கேட்டபோது கருத்துக்களை தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேஷப்ரிய இவ்வாறான செயல்களை மேற்கொள்ளும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தான் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.