செய்திகள்

சட்ட விரோத மது , போதைவஸ்து விற்பனையாளர்கள் உட்பட 51 பேருக்கு எதிராக கிழக்கில் சட்ட நடவடிக்கை

கிழக்கு மாகாணத்தில் மதுவரித்திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பாரிய தேடுதல் நடவடிக்கைகளின்போது சட்ட விரோத மதுபான விற்பனை நிலையம்,சட்ட விரோத மதுபான விற்பனை விடுதிகள்,போதை வஸ்து விற்பனையாளர்கள் உட்பட 51பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண மது வரித்திணைக்களத்தின் விசேட பிரிவு அத்தியட்சர் என்.துசாதரன் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் மதுவரித்திணைக்களத்தின் புதிய ஆணைநாயளர் நாயகத்தின் ஆலோசனைக்கு அமைய கிழக்கு மாகாண மதுவரித்திணைக்களத்தின் உதவி ஆணையாளர் ஜே.என்.கே.பண்டாரவின் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்கள அத்தியட்சர் சோதிநாதன் மற்றும் கிழக்கு மாகாண மதுவரித்திணைக்களத்தின் விசேட பிரிவு அத்தியட்சர் என்.துசாதரன் ஆகியோர் இணைந்து இந்த விசேட தேடுதலை நடத்தியுள்ளனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண மதுவரித்திணைக்களத்தின் விசேட பிரிவு அத்தியட்சர் என்.துசாதரன்,

கடந்த செவ்வாய்க்கிழமை தொடக்கம் இன்று செவ்வாய்க்கிழமை காலை வரையில் இந்த சுற்றிவளைப்பு கிழக்கு மாகாணத்தின் அம்பாறை,மட்டக்களப்பு,திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்போது அனுமதியின்றி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பெருமளவு மதுபான போத்தல்கள்,பியர் போத்தல்கள்,சிகரட் வகைகள்,போதைப்பொருட்கள் மீட்கப்பட்டது. இதன்போது அனுமதியில்லாமல் மதுவிற்பனைசெய்த 17 விடுதிகள்,25மது விற்பனை நிலையங்கள்,09போதைப்பொருள் விற்பனையாளர்கள் கைதுசெய்யப்பட்டு சட்ட நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு எதிராக பொத்துவில், கல்முனை, அம்பறை, அக்கரைப்பற்று, களுவாஞ்சிகுடி, மட்டக்களப்பு, வாகரை,வாழைச்சேனை,திருகோணமலை ஆகிய நீதிவான் நீதிமன்றங்கள் ஊடாக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
புதிய அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் அனுமதியில்லாத மதுவிற்பனை நிலையங்களை சுற்றிவளைத்து அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த விசேட தேடுதல் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக நடாத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.