செய்திகள்

சட்ட விரோத மின்சாரம்:யாழ்.கட்டுவன் வாசிகள் மூவருக்கெதிராக தலா 10 ஆயிரம் ரூபா அபராதம்

யாழ்.கட்டுவன் பகுதியில் சட்ட விரோதமான முறையில் மின்சாரம் பெற்ற மூவருக்கெதிராக தலா 10 ஆயிரம் ரூபா விதித்து மல்லாகம் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன் நேற்று வெள்ளிக்கிழமை (08.5.2015)உத்தரவிட்டார்.

தெல்லிப்பழைப் பொலிஸாரும்,கொழும்பிலிருந்து வருகை தந்த மின்சார சபையின் புலனாய்வு அதிகாரிகளும் இணைந்து அண்மையில் கட்டுவன் பகுதியில் திடீர் தேடுதல் நடவடிக்கையை நடாத்தியிருந்தனர்.இதன் போது கைதான மூவருக்கும் எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது சந்தேகநபர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்தே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பித்தார்.
யாழ்.நகர் நிருபர்-