செய்திகள்

சம்பூர் மக்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவர்: கிழக்கு முதல்வர்

சம்பூர் மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதற்காக கிழக்கு மாகாண சபையினூடக விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படும் என்றும் கிழக்கு மாகாண முதலமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண அமைச்சரவை நியமனத்தின் பின்னர்தான் வடக்கு மாகாண சபை முதல்வரை சந்தித்துப் பேச்சு நடத்துவார் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றுக்கிடையிலான இருதரப்பு பேச்சு எதிர்காலத்திலும் தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் திங்கட்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறியதாவது ;

சம்பூர் அனல் மின்நிலைய திட்டத்துக்காக 540 ஏக்கர் காணியும் பொருளாதார விசேட வலயம் என்ற பெயரில் 818 ஏக்கர் நிலமும் நகரமயமாக்கல் திட்டத்தின் கீழ் ஆயிரம் ஏக்கர் காணியும் பொது மக்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன் பெரகும்பா கடற்படை முகாம் அமைப்பதற்காக மேலும் 217 ஏக்கர் காணியும் விதுர கடற்படை முகாமுக்காக 29 ஏக்கர் காணியும் பொதுமக்களிடம் இருந்து பலவந்தமாகப் பெறப்பட்டுள்ளன. சம்பூர் மக்கள் மணல்சேனை, பட்டித்தெரு, கிளிவெட்டி ஆகிய முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பொதுமக்களிடமிருந்து பலவந்தமாக கைப்பற்றப்பட்ட காணிகளில் கடற்படை முகாமும் அனல் மின் முதலீடுகளை அதிகரிப்பதாகக் கூறி கடந்த அரசு பொதுமக்களின் காணிகளைப் பலவந்தமாகக் கைப்பற்றியது. சில முதலீட்டாளர்கள் காணிகளைப் பெற்றுக்கொண்டு இன்றுவரை முதலீடுகளை மேற்கொள்ளாமல் உள்ளனர்.

இது குறித்து மாகாணத்தில் சகல அங்கத்தவர்களின் உதவியுடன் தீர்மானமொன்றை நிறைவேற்ற உள்ளோம். அவ்வாறு தீர்மானம் நிறைவேறினால் சகல காணிகளும் மீளப் பெறப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்.