செய்திகள்

சர்வதேச விசாரணைக்கு இடமில்லை: உள்நாட்டு விசாரணை ஜூனில் ஆரம்பம் என்கிறார் மைத்திரி

யுத்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான உள்நாட்டு விசாரணைகள், எதிர்வரும் ஜூன் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டு செம்டெம்பருக்குள் நிறைவடையும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தெரிவித்திருக்கின்றார்.

குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் ஒருபோதும் இணங்கப்போவதில்லை என்று ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூனிடம் தான் திட்டவட்டமாகக் கூறியதாகவும் அவரும் அதனை ஏற்றுக்கொண்டதாகவும் ஜனாதிபதி கூறினார்.

இலங்கையின் தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்களுடனான சந்திப்பொன்று இன்று புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, ‘வில்பத்து சரணாலத்திலுள்ள காடுகளை அழிப்பது தவறாகும். எந்தவொரு காடும் அழிக்கப்படக் கூடாது. அதற்கு இடமளிக்கப்போவதுமில்லை. இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் இரண்டாம், மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு காணி வழங்கப்பட வேண்டும் என்பது உண்மை. அதற்காக காட்டுப் பகுதியை அதற்காகப் பயன்படுத்த இடமளிக்க முடியாது’ என்றார்.

கடந்த அரசாங்கத்தின் காணி விவகாரம் தொடர்பான அதிரடிப்படையின் உத்தரவுக்கிணங்கவே வில்பத்துவில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் ஜனாதிபதி இதன்போது மேலும் கூறினார்.