செய்திகள்

சிங்கக் கொடி விவகாரம்: விசாரணை ஆரம்பம்

சிறுபான்மையினரைக் குறிக்கும் நிறங்களற்ற பழைய தேசியக் கொடியை கொழும்பிலுள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிலும் நாட்டின் ஏனைய பாகங்களிலும் பறக்க விட்டதற்காக பொலிஸ் மா அதிபர் என்.கெ. இலங்ககோனின் தலைமையில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஒரு நாட்டின் தேசியக் கொடியின் வடிவத்தை மாற்றியமைத்திருப்பதானது இலங்கை ஜனநாயக குடியரசின் அரசியலமைப்பு மற்றும் சட்டத்தை மீறும் செயலாகும்.

யாருக்காவது எச்சந்தர்ப்பத்திலாயினும் நாட்டின் தேசியக் கொடியின் வடிவத்தை மாற்ற வேண்டுமாயின் அதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் 2/3 பெரும்பான்மை வாக்குகளுடன் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றும் தேவையாகும். இதனைத்தவிர தனிப்பட்டவர்கள் தாம் நினைத்தவாறு நாட்டின் தேசியக் கொடியை மாற்ற முடியாது. எனவே இந்த பொறுப்பற்ற நடவடிக்கையில், ஈடுபட்டவர்களுக்கு சட்டத்தின்படி ஆகக்கூடிய தண்டனையை பெற்றுத்தரும் வகையில் பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மேல் மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டலின் கீழ் விசேட பொலிஸ் குழு நேற்று (26) இது தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்தது. இதேவேளை, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வளாகத்தில் சிறுபான்மையினரைக் குறிக்கும் நிறங்களற்ற பழைய தேசியக்கொடி பறக்க விட்டமை தொடர்பில் மாகாண சபை உறுப்பினர் அசாத்சாலி பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

வேறு சந்தர்ப்பத்தில் ஆர்ப்பாட்ட மொன்றிலும் இதேபோன்றதொரு கொடி பறக்கவிடப்பட்டதாக சட்டத்தரணிகள் சிலர் கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்த முறைப்பாடுகளைத் தொடர்ந்தே சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஜயசுந்தர தலைமையில் மேற்படி விசேட பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளது.