செய்திகள்

சித்திரத்தின் மூலம் சிகிச்சை

உலக நாகரீக வளர்ச்சியில் சித்திரமானது தொடக்க காலத்தில் இருந்தே ஒரு செய்திப்பரிமாறமான ஊடகமாக அமைந்து வந்துள்ளதோடு, அவை உள அழுத்தங்களையும் குறைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இசையலை கொண்ட மொழிக்கு எழுத்து வடிவம் கொடுத்த ஆதிப் பொது மொழி சித்திரமாகும். இச் சித்திரம், காலப் போக்கில் குறியீட்டு வடிவமாகி அவை எழுத்துருவாக மாறியது. இதற்கு ஒரு சத்தம் கொடுத்து அதை உணர்வுக் கேற்ப ஒழுங்குபடுத்தி ஓசையாக்கி இசையாகப் பேசும் இனிய படைப்பைக் கூட குகைச் சித்திரங்களே தந்துள்ளன.
தற்போது உலகில் எத்தனையோ மொழிகள் தோன்றியுள்ளது. அத்தனை மொழி பேசும் மக்களும்; ஒரே தடவையில் உணர்ந்து கொள்ளக் கூடிய பொது மொழி சித்திரமே தான்.
சித்திரம் சிந்தனையையும் செய்தியையும் வெளிக்கொணர்கின்றது. ஓவியம் அழகையும் அமைதியையும் வெளிக்கொணர்கின்றது. இவை இரண்டையும் சேர்த்து நோக்கும் போது வர்ணத்தின் ஆதிக்கத்தையும் ரேகையின் ஆதிக்கத்தையும் நன்கு புரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு நிறங்களுக்கும் ஒவ்வொரு உணர்வுகள் உண்டு. ஒவ்வொரு உணர்வுக்கும் ஒவ்வொரு அசைவுகள் உண்டு. இவ் அசைவுகள் யாவும் ஒரு சித்திரத்தில் சமகால உணர்வுகளோடு வெளிப்படுகின்றன. ஆதலால் ஒரு மனிதனின் இன்பம், துன்பம் வடுக்கள் என்பன இதன் மூரம் வெளிப்படுகின்றது. இந்த வெளிப்பாடுகள் யாவும் அவ்வப்படைப்பாளிகளை ஆற்றுப்படுத்துகின்றது.

sam-6

அடுத்த மனிதனிடம் இருந்து தனது திருப்தியை எதிர்பார்ப்பதிலும் பார்க்க தனக்குத்தானே திருப்தியை உருவாக்கிக் கொள்வது முழமையானது. பின்பு தனது முழுமையை அடுத்தவருக்கு பகிர்ந்தளித்தல் பொருத்தமுடையதாக இருக்கும். இதை ஒரு உளவியல் கருத்துக்கணிப்பாக பார்க்கலாம்.
சித்திரத்தின் சிகிச்சை என்பதை, பொருளாதாரத்தினால், போரினால், உறவுகளினால், தோல்விகளினால் இப்படிப் பல காரணங்களினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், இளைஞர்கள், யுவதிகள், நோயாளிகள் போன்றோர்களுக்கூடாகத் தான் இனம் காண முடியும். குழந்தைகளின் மத்தியில் உளவள செயல் திட்டத்தை யுனிசெவ், UNHCR, கியூடெக், சுகவாழ்வு நிலையம், கரித்தாஸ் சிறுவர் பாதுகாப்பு நிதியம் போன்ற நிறுவனங்களின் ஊடாகவும் மதுவிலக்கு செயல்த்திட்டத்தை போரூட் நிறுவனத்தின் ஊடாகவும், செயல்ப்படுத்தப்படும் போது, சித்திரத்தின் ஊடாக அவர்கள் தமது; உணர்வுத் தாக்கங்களை வெளிப்படுகின்றமையை இனம் காண முடிந்தமையை நேரடியாக அவதானிக்க முடிந்தது. இதன் மாற்றுவழியாக உள ஆரோக்கியத்தை வழங்கக்கூடிய முறையில் அவர்களின் சித்திரத்தில் ஓவியத்தைக் கலந்து, தாங்களே தம்முடைய படைப்பின் ஊடாக மகிழ்ச்சியடையக் கூடிய நுட்பமுறைகளைக் கையாண்டு சிகிச்சை வழங்கல் இதன் பிரதான செயற்பாடாக அமைந்தது. ஏனெனில் ஏற்றுக்கொள்ளல், மன்னித்தல் இவையாவும் கலைப்படைப்பின் விமர்சனங்களில் தங்கியுள்ளது. ரசனை என்பது தன்னைத் தேடுவது, தன்னை அறிவது, தன்னை ஒழுங்குபடுத்துவது, தன்னைப் பாதுகாப்பது, தன்னைப் பக்குவப்படுத்துவது, தன்னைச் சமூகத்தில் பயன்படுத்தக் கூடிய நிலைக்கு மாற்றிக் கொள்வது போன்றவை ஆகம் இதுவெ இக் கலைப்படைப்புக்களின் வெளிப்பாடாகவும் உள்ளது.
sam-7

உளநோய், உடல் நோய், போன்றவைகள் எம்மால்; விரும்பத்தகாத, ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் எமக்குள் இருந்தும் புறத்தேயிருந்தும் வந்து அடைந்தவைகள் தான். இவைகளை சுயமாகக் களைந்து கொள்வதற்கு ஏற்ற ஒரு இலகுவான ஊடகமே சித்திரமாக அமைந்துள்ளது. இச் சித்திரக்கலையை உலகில் உள்ள யாவரும் பயன்படுத்தலாம்.
சித்திரம் கீறாத குழந்தையுண்டோ. தவழும் போதே ஒரு குழந்தை சித்திரத்தைக் கீறத் தொடங்குகின்றது. அது சரியோ பிழையோ, அந்த சித்திரங்கள் பற்றி அந்த குழந்தை புரிந்து கொள்கிறதோ இல்லையோ என்பது வேறுவிடயம்.. ஆனால் தனது சித்திரத்தால் அந்தக் குழந்தை திருப்பதியடைகின்றது. அந்த குழந்தைக்கு யார் இந்த மொழியைக் கற்றுக் கொடுத்தது. உள் உணர்வுகளே உடலுக்குக் கற்றுக்கொடுத்தது.
இதைத் தான் எல்லோரும் அனுபவிக்க வேண்டும். இதனால் இரத்த அழுத்தம் சமநிலையடையும். ஒழுங்குபடுத்தப்பட்ட உள அதிர்வுகள் மூளையைப் பாதுகாக்கும். மூளையின் தீர்மானம் உணர்வுகளைச் செம்மைப்படுத்தும்.
செம்மையான உணர்வுகள் ஆரோக்கியத்தையும், ஆரோக்கியம் சந்தோஷத்தையும் தரும். இவைதான் சிகிச்சையின் நுட்பமாகும்.
தொடரும்……

Related News