செய்திகள்

சிராந்தியை காப்பாற்ற மஹிந்த தொலைபோசியில் தொடர்பு கொண்டாரா ? ரணில் வெளிப்படுத்த வேண்டும்: ஜே.வி.பி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் பாரியாரான சிராந்தி ராஜபக்‌ஷ கடந்த முதலாம் திகதி விசாரணைக்காக நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு செல்லாது சபாநாகரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு செல்லும் போது  மஹிந்த ராஜபக்‌ஷ தன்னுடன் தொலைபேசியில் கலந்துரையாடினாரா? இல்லையா? என்பதனை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டுமென ஜே.வி.பி தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜே.வி.பி தலைம அலுவலகத்தில் நேற்று  நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறிலிய சவிய வங்கிக் கணக்கு தொடர்பாக சிரந்தி ராஜபக்‌ஷவிடம் கடந்த ஏப்ரல் மாதம் 18ம் திகதியே விசாரணை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அது எவ்வாறு ஜுன் 1ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டதென தெரியவில்லை. இந்நிலையில் கடந்த முதலாம் திகதி அவர் நிதி மோசடி விசாரணை பிரிவுக்கே விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் அங்கு செல்லாது சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கே சென்றுள்ளார். இவர் எவ்வாறு அங்கு சென்றார் என்பதனை பிரதமர் நாட்டுக்கு தெரிவிக்க வேண்டும்.
இந்நிலையில் நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு முன்னால் முதலாம் திகதி அமைதியற்ற நிலைமை காணப்பட்டதாகவும் இதனால் அவர் அங்கு செல்லாது சபாநாயகரின் இல்லத்துக்கு சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 28ம் திகதி நடைபெற்ற கூட்டமொன்றிலேயே நான் அவர் சபாநாயகரின் வீட்டுக்கு செல்ல போகின்றார் என்பதனை தெரிவித்துவிட்டேன். அப்போதே எனக்கு இது தெரியும்.
எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பாக மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு கதைத்தாரா இல்லையா என்பதனையும் பிரதமர் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.  என அவர் தெரிவித்துள்ளார்.