செய்திகள்

சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவங்களைப் பாதுகாக்க தொடர்ந்து குரல் கொடுப்போம்: டக்ளஸ் தேவானந்தா

சிறுபான்மைக் கட்சிகளையும், சிறு கட்சிகளையும் பாதிக்காதவாறு தேர்தல் சீர்திருத்தத்தை பெரும்பான்மைக் கட்சிகள் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். இந்த நோக்கத்திற்காக உரிய அனைத்துத் தரப்பினரும் ஒன்றுபட்டிருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும். சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவங்களைப் பாதுகாப்பதற்கு நாம் தொடர்ந்தும் குரல் கொடுத்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முறைமை சீர்திருத்தமானது சிறுபான்மைக் கட்சிகள் மற்றும் சிறிய கட்சிகள் மீது எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும் என்பது தொடர்பிலும், அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பிலுமான கலந்துரையாடலொன்று நேற்றைய தினம் மாலை, கொழும்பு, பம்பலப்பிட்டி, ஓசன் கொழும்பு ஹோட்டல் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றபோதே செயலாளர் நாயகம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

32க்கும் மேற்பட்ட சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், முற்போக்காளர்கள், சமூக நலன் விரும்பிகள், கல்வியியலாளர்கள் பலர் இக் கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

விருப்பு வாக்குகளை நீக்கி, விகிதாசார தேர்தல் முறைமையினை சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செழுமைப்படுத்தி பேணுவது தொடர்பில் இங்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

அதே நேரம், இவ் விடயம் தொடர்பில் குழுவொன்றை அமைத்து, தேர்தல் முறைமை மாற்றத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்களைக் குறிப்பது, அது தொடர்பில் உரிய அனைத்துத் தரப்பினரும் ஆராய்ந்த பின்னர், ஜனாதிபதி, பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர், தேர்தல்கள் ஆணையாளர் ஆகியோருக்கும், பொதுமக்களுக்கும் அறிவிப்பது போன்ற விடயங்களை மேற்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இக் கலந்துரையாடலுக்கான அழைப்பினை சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளின் சார்பில் டக்ளஸ் தேவானந்தா, ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், பிரபா கணேசன், சுரேன் சுரேந்திரன் ஆகியோர் விடுத்திருந்தனர்.