செய்திகள்

சுதந்திரக் கட்சியைப் பிளவுபடுத்தும் நோக்கில் ரணில் செயற்படுகிறார்: யாப்பா

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பிளவுபடுத்தும் நோக்கிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  செயற்படுவதாகவும்  அவ்வாறு கட்சியைப் பிளவுபடுத்துவதற்கு தான் ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் எனவும் முன்னாள் அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

மாத்தறை வெலிகம பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே மகிந்த யாப்பா இவ்வாறு தெரிவித்துள்ளார்.  அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது;

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இந்த நாட்டில் பிரதானமான அரசியல் கட்சியாகும். இதுவரை யாருக்கும் கடமைப்பட்டதில்லை. ஆனால் சிலர் அந்த நிலைமையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.

இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்க கட்சியைப் பிளவுபடுத்தும் நோக்கில் செயற்படுகின்றார். அவ்வாறு இல்லையென்றால் அவரால் அதிகாரத்துக்கு வர முடியாது. இதனால் எந்த நிலைமை வந்தாலும் இந்த  கட்சியை பிளவுபடுத்த யாரும் இடமளிக்கக்கூடாது.

கட்சி பிளவுபடுவதனைத் தடுப்பதற்காக நாம் முன்நிற்போம். இந்த யானையை விரட்டுவது எங்களுக்கு அவ்வளவு  கடினமானதல்ல. இதற்கு முன்னர் நாம் விரட்டிக் காட்டியுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.