செய்திகள்

சுதுமலை சின்மய பாரதி வித்தியாலயத்திற்கு அருகே கூடும் இளைஞர்கள் மதுபோதையில் பெரும் அட்டகாசம்

யாழ்.சுதுமலை சின்மய பாரதி வித்தியாசாலைக்கு அண்மையிலுள்ள வீதியில் மாலை நேரங்களில் கூடும் இளைஞர்கள் மதுபோதையில் அட்டகாசம் புரிந்து வருகின்றனர்.

இதனால் அப்பகுதிப் பொதுமக்களும் குறித்த வீதியால் போக்குவரத்துச் செய்வோரும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பாடசாலையின் மைதானத்தில் விளையாடுவதற்காக வரும் இளைஞர்களே வீதியில் நின்று அட்டகாசம் புரிகின்றனர்.விளையாட்டு மைதானத்திற்குப் பாதுகாப்பு வேலி இல்லாததால் குறித்த இளைஞர்கள் அங்கு வந்து கூடுகின்றனர் எனப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
பாடசாலை அதிபரிடம் இது தொடர்பில் பல தடவைகள் தெரிவித்த போதும் அவர் உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மதுபோதையில் வீதியில் நிற்கும் இளைஞர்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதுடன் சில சந்தர்ப்பங்களில் வீதியால் செல்வோருடன் முரண்பட்டும் வருகின்றனர்.இதனால் பலரும் அவ்வீதியால் செல்வதைத் தவிர்த்து வருகின்றனர்.குறிப்பாக இளம்பெண்கள் அவ் வீதியால் செல்வதற்கு அஞ்சி வேறு வீதிகளை நாடுகின்றனர்.

எனவே இந்த விடயத்தில் உரிய தரப்பினர் தலையிட்டு நடவடிக்கைளை எடுக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ்.நகர் நிருபர்-