செய்திகள்

சுயநலத்துக்காகவே விஜயகாந்த் டெல்லி பயணம்: அன்புமணி கடும் தாக்கு

கடந்த 4 வருடங்களாக சட்டசபைக்கே செல்லாத விஜயகாந்த், தனது சுயநலத்துக்காக டெல்லி சென்றிருக்கிறார் என பா.ம.க. எம்.பி. அன்புமணி ராமதாஸ் காட்டமாக கூறியுள்ளார்.

இணையதள சமநிலை சட்டம் கோரி பா.ம.க. சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பின் அன்புமணி ராமதாஸ் எம்.பி. செய்தியாளர்களிடம் கூறுகையில், ”விஜயகாந்த் சட்டசைபயில் எதிர்க்கட்சி தலைவர் பதவி வகிப்பதவர். ஆனால், அவர் அந்த பதவியை மதிக்கவில்லை. கடந்த 4 வருடங்களாக அவர் சட்டசபைக்கே செல்லவில்லை. இப்போது சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் தனது சுயலாபத்திற்காக அவர் டெல்லிக்கு சென்றிருக்கிறார்.

அவர் தனது சுயநலத்திற்காக சென்றதால், நாங்கள் அவருடன் செல்லவில்லை. இதனால், பா.ம.க.வை தனிமைப்படுத்த முடியாது. அந்த அளவுக்கு பலவீனமாக கட்சி பா.ம.க. அல்ல. தி.மு.க. ஆரம்பித்து 65 ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த கட்சியே நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியவில்லை. நாங்கள் ஒரு இடத்தை பிடித்திருக்கிறோம். எனவே, பா.ம.க.வுக்கு எந்தவித பின்னடைவும் ஏற்படாது.

கடந்த இரு தினங்களுக்கு முன்புகூட கர்நாடக முதலமைச்சர் தலைமையில் அம்மாநில கட்சிகள் அனைத்தும் ஒன்றாக பிரதமர் மோடியை சந்தித்து இருக்கிறார்கள். அதுபோன்ற ஒற்றுமை தமிழகத்திலும் வரவேண்டும். எனவே, தமிழக முதல்வரும் அனைத்து கட்சியினரையும் அழைத்துச் சென்று, காவிரி பிரச்னை தொடர்பாக பிரதமரிடம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

காவிரி பிரச்னை தமிழகத்தின் வாழ்வாரத்தை அடிப்படையாகக் கொண்டது. லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கை பிரச்னை. ஆனால், காவிரி பிரச்னையில் தமிழகம் பொறுமையாக இருக்கிறது. இப்படி தூங்கிக் கொண்டிருந்தால் ஒன்றுமே இல்லாமல் போய் விடும். தமிழக அரசு மவுன விரதம் இருப்பது சரியல்ல. எனவே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதியை சந்தித்து மனு கொடுத்துள்ளேன். அவரும் பரிசீலிப்பதாக கூறியிருக்கிறார்.” என்றார்.