செய்திகள்

சுஷ்மாவை பதவி விலக்க அருண் ஜெட்லி காய் நகர்த்துகிறார் ?

லலித் மோடி விவகாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவாராஜூக்கு நெருக்கடி ஏற்பட மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியே காரணமென பாஜக எம்பியும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான கீர்த்தி ஆசாத் மறைமுகமாக குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து பாஜக எம்.பியான, கீர்த்தி ஆசாத், தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், சுஷ்மா சுவராஜ், லலித் மோடிக்கு உதவிய விவகாரத்தில் பலரும், வெளியுறவுத்துறை அமைச்சரையே குற்றம் சாட்டுவது தவறு. நான் சுஷ்மாவுக்கு ஆதரவு தருகிறேன்.

லலித் மோடி மீது அமலாக்கப்பிரிவு விசாரணை நடைபெறுகிறது. ஆனால், 2009ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் ஐபிஎல் நடைபெற அனுமதியளித்த பிற பிசிசிஐ நிர்வாகிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அருண் ஜெட்லி என்ன சொல்வார். இவ்வாறு கீர்த்தி ஆசாத் கீச்சியுள்ளார். ஏற்கனவே, ஒரு டிவிட்டில், இந்த விவாகரத்தின் பின்னணியில் புல்லுக்குள் மறைந்திருக்கும் பாம்பு போல ஒரு முக்கிய புள்ளி இருப்பதாக அவர் தெரிவித்து சர்ச்சையை கிளப்பியிருந்தார். பாரதிய ஜனதாவில் நிலவும் உள்கட்சி மோதல் இதன்மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

டெல்லி மாநில கிரிக்கெட் சங்க விவகாரம் தொடர்பாக கீர்த்தி ஆசாத்திற்கும், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கும் இடையே மோதல் மூண்டது. கிரிக்கெட் சங்க தலைவர் பதவியில் இருந்து அருண் ஜெட்லி விலக வேண்டும் என்றும் அவர் போர்க்கொடி தூக்கினார். அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கனவே தகராறு உள்ள நிலையில் இப்போதும் அருண் ஜெட்லியை தான் கீர்த்தி ஆசாத் மறைமுகமாக தாக்குவதாக டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதனிடையே, பாஜக எம்.பியான, சத்ருகன் சின்ஹாவும், கீர்த்தி ஆசாத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஆசாத் எனது நண்பர். நன்கு விவரத்தை தெரிந்து கொண்ட பிறகே கருத்து கூறியுள்ளார் என்று சத்ருகன் சின்ஹா கூறியுள்ளார்.