செய்திகள்

சுஷ்மா சுவராஜ் இன்று கொழும்பு வருகின்றார்: கூட்டமைப்புடன் நாளை பேச்சு

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று வெள்ளிக்கிழமை மாலை இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

எதிர்வரும் 13 ஆம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபடுவதற்கு முன்னோடியாக சுஷ்மா சுவராஜின் வருகை அமைந்துள்ளது என வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் சிலருடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சிலவற்றின் முக்கியஸ்தர்களுடனும் சுஷ்மா சுவராஜ் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார். கூட்டமைப்பின் தலைவர்களை நாளை சனிக்கிழமை மாலை அவர் சந்திப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.