செய்திகள்

சென்னையில் 24ல் குண்டு வெடிக்கும்: டி.ஜி.பி.க்கு ஐஎஸ் மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு

சென்னையில் 24ஆம் தேதி குண்டு வெடிக்கும் என்றும், ஆர்எஸ்எஸ் பிரமுகர்கள் 10 பேரையாவது சுட்டுக் கொல்வோம் எனவும் தமிழக டிஜிபி அலுவலகத்துக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பினர் மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள டிஜிபி அலுவலகத்துக்கு நேற்று கூரியர் தபாலில் ஒரு கடிதம் வந்துள்ளது. அந்தக் கடிதத்தில், ‘சென்னையில் தீவிரமாக செயல்படும் ஆர்எஸ்எஸ் பிரமுகர்கள் 50 பேரை அடையாளம் கண்டுபிடித்து வைத்திருக்கிறோம். அவர்களில் 10 பேரையாவது விரைவில் சுட்டுக் கொல்வோம். கோவையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தைப் போல சென்னையிலும் ஏப்ரல் 24ஆம் தேதி குண்டு வெடிக்கும்’ என்று எழுதப்பட்டிருந்தது. கடிதத்தின் கடைசியில் ஐஎஸ்ஐஎஸ் என எழுதப்பட்டிருந்தது.

கடிதத்துடன் ஒரு துண்டுச் சீட்டும் இருந்தது. அதில், ‘அனைத்து பத்திரிகையாளர்களுக்கும், டிஜிபிக்கும், உளவுத்துறை அதிகாரிகளுக்கும் இதை எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று எழுதப்பட்டிருந்தது.

இரண்டு கடிதங்களும் ஆங்கிலத்தில் சிவப்பு எழுத்துக்களால் எழுதப்பட்டிருந்தன. இதுகுறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடிதத்தை அனுப்பியது யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோன்ற ஒரு கடிதம் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகேயுள்ள பத்திரிகையாளர் மன்றத்துக்கும் (பிரஸ் பிளப்) வந்துள்ளது. அதிலும் அதே வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. இரண்டையும் ஒரே நபர்தான் அனுப்பியிருக்கிறார். சென்னையில் வசிக்கும் நபர்கள்தான் இந்தச் செயலில் ஈடுபட்டிருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கடிதங்களை அனுப்பியவர்களை உடனே பிடிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். மேலும், தீவிரவாத அமைப்பின் திட்டங்கள் குறித்த ரகசிய உளவு தகவல்களை பெறவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.