செய்திகள்

சென்னை அணிக்கு 4–வது வெற்றி: நெக்ராவுக்கு டோனி பாராட்டு

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தி 4–வது வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 8 விக்கெட் இழப்புக்கு 181 ரன் குவித்தது. ரெய்னா 32 பந்தில் 62 ரன்னும், சுமித் 29 பந்தில் 38 ரன்னும் (3 பவுண்டரி, 3 சிக்கர்), டுபெலிசிஸ் 18 பந்தில் 33 ரன்னும் எடுத்தனர். யூகேந்திர ஷால் 3 விக்கெட்டும், இக்பால் அப்துல்லா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 154 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் 27 ரன்னில் சென்னை அணி வெற்றி பெற்றது. விராட் கோலி அதிகபட்சமாக 42 பந்தில் 51 ரன் எடுத்தார். ஆசிஷ் நெக்ரா 10 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். ஈஸ்வர் பாண்டே, பிராவோ, ஜடேஜா தலா 1 விக்கெட் எடுத்தனர்.

இந்த வெற்றி குறித்து சென்னை அணி கேப்டன் டோனி கூறியதாவது:–

எங்களது செயல்பாடு சிறப்பாக இருந்தது. பேட்டிங், பவுலிங்கில் சில திட்டமிடுதல் தவறாக அமைந்துவிட்டது. சீனியர் பந்து வீச்சாளர் ஆசிஷ் நெக்ரா சிறப்பாக வீசினார். டுபெலிசிஸ் கடைசி ஆட்டத்தில் மிகவும் அபாரமாக விளையாடினர். மேலும் அவர் பந்து வீச்சாளர்களையும், சீனியர் வீரர்களையும் அடிக்கடி பேசி ஆலோசனைகளை வழங்கினார். டி வில்லியர்சின் ‘ரன் அவுட்’ முக்கியமானதாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆட்ட நாயகன் விருது பெற்ற ரெய்னா கூறும் போது, அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றாலும் நாங்கள் 20 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டோம். ஆனால் பந்து வீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டு வெற்றியை பெற்று தந்தனர். ஆசிஷ் நெக்ரா கடந்த 2 ஆண்டாக அபாரமாக வீசி வருகிறார் என்றார்.

பெங்களூர் அணியின் தோல்வி குறித்து கேப்டன் வீராட்கோலி கூறும் போது, இந்த தோல்வி உண்மையிலேயே ஏமாற்றம் அளிக்கிறது. எங்களது ஜோடி நிலைத்து நிற்கவில்லை. சிறந்த பார்ட்டனர்ஷிப் அவசியம். ஸ்டார்க் அணிக்கு திரும்பி இருப்பது எங்களுக்கு கூடுதல் பலமே என்றார்.

சென்னை சூப்பர் சிங்ஸ் 6–வது ஆட்டத்தில் விங்ஸ்லெசன் பஞ்சாப்பை சந்திக்கிறது. இந்த ஆட்டம் வருகிற 25–ந்தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.

பெங்களூர் அணி அடுத்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை நாளை எதிர் கொள்கிறது.