செய்திகள்

சோமவன்சவின் புதிய கட்சி 27 இல் உதயமாகிறது

ஜே.வி.பியின் முன்னாள் தலைவரும் தற்போது அக்கட்சியிலிருந்து விலகியவருமான சோமவன்ச அமரசிங்க எதிர்வரும் 27 ஆம் திகதி புதிய கட்சியை ஆரம்பிக்கவுள்ளதாக சோமவன்ச தரப்பு சிரேஷ்ட அரசியல்வாதியொருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

ஜே.வி.பியிலிருந்து விலகிய சோமவன்ச புதிய கட்சியை ஆரம்பிப்பதாக கூறியதைத் தொடர்ந்து அனைத்துக் கட்சிகளும் அவர் கூட்டணி அமைப்பாரா என்றும் தனிக்கட்சி ஒன்றை உருவாக்குவாரா என்றும் எதிர்ப்பார்த்திருந்த நிலையில், அவர் கட்சியை உருவாக்க திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக எதிர்வரும் 27 ஆம் திகதி முக்கிய அறிவிப்பை விடுக்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

1988 முதல் ஜே.வி.பியில் இணைந்திருந்த பல அரசியல் தலைவர்கள் தற்போது சோமவன்சவுடன் கைகோர்த்திருப்பதாகவும், இன்னும் பலர் சோமவன்சவின் புதிய கட்சியில் இணையவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், சோமவன்சவின் இப்புதியகட்சி மக்களுக்கு புதிய சிந்தனையை ஏற்படுத்துவதோடு ஜே.வி.பிக்கு சவாலாக அமையுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். அரசியல் அனுபவமும், முதிர்ச்சியும் பெற்றவர்களும் இந்த புதிய கட்சியில் விரும்பி இணையலாம் எனவும் அவர் தெரிவித்தார்.