செய்திகள்

ஜனவரி 9க்கு பின்னர் மஹிந்த ஹெலியில் பயணிக்கவில்லையாம்

கடந்த ஜனவரி 9ம் திகதிக்கு பின்னர் தான் எந்த சந்தர்ப்பத்திலும் ஹெலிகப்டரில் பயணிக்கவில்லையெனவும்  தனது பயண வசதிகளுக்காக ஹெலிக்கப்டர் வழங்கப்பட்டதாக வெளியான செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை எனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவரது ஊடக இணைப்புச் செயலாளர் ரோஹான் வெலிவிட உடாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஜனவரி 9ம் திகதி கொழும்பில் இருந்து தங்காலை நோக்கி முன்னாள் ஜனாதிபதி என்ற அடிப்படையில் ஹெலிக்கப்டரில் பயணித்தார். அது தவிர அவர் இதுவரை அரச ஹெலிக்கப்டரில் பயணத்தை மேற்கொள்ளவில்லை. மேலும் அன்றில் இருந்து எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஹெலிக்கொப்டர் வசதியை அவர் கோரவும் இல்லை.
இவரின் பாதுகாப்புக்கென பொலிஸ் அதிகாரிகள் 105 பேர் வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் மூவர் உள்ளனர்.  இவர்களுக்கு உத்தியோகபூர்வமாக மூன்று வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. எனினும் அவர்களுக்கு அலுவலக வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லை என்பதோடு, குறைந்த வசதிகளுடன் கூடிய வீட்டு வசதிகளே வழங்கப்பட்டுள்ளன.  அத்துடன் இரண்டு உயர் அதிகாரிகள் உட்பட 108 இராணுவ சிப்பாய்கள் உள்ளனர். இவர்களுக்கு இன்று வரை உத்தியோக பூர்வமாக வாகன வசதிகள் கிடைக்கப் பெறவில்லை.
அத்துடன் அமைச்சர் ஜோன் அமரதுங்க குறிப்பிட்டது போன்று, மஹிந்த ராஜபக்ஷவின் பயணத்திற்காக ஹெலிக்கொப்டர் வழங்கப்படவில்லை எனவும், ஹெலிக்கொப்டர் வழங்குமாறு கோரிக்கைகளும் முன்வைக்கப்படவில்லை எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.