செய்திகள்

ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான மேலும் 120 வாகனங்கள் பற்றி தகவல் இல்லை: பொலிஸ் பேச்சாளர்

ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான மேலும் 120 வாகனங்கள் தொடர்பாக எவ்வித தகவல்களையும் பெற்றுக்கொள்ளமுடியாமலிருப்பதாக இலங்கையின் காவல்துறைப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்திருக்கின்றார்.

இவ்வாறு காணாமல்போயுள்ள வாகனங்கள் அரசாங்கத்துக்குச் சொந்தமானவை என்பதால் அது தொடர்பில் தகவல் கிடைத்தால் உடனடியாகத் தமக்குத் தெரியப்படுத்துமாறும் அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டிருக்கின்றார்.

காணமல்போன இந்த வாகனங்களை வைத்திருப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்த அவர், இவ்வாறான வாகனங்கள் பற்றிய தகவல் கிடைத்தால் அது தொடர்பில் காவல்துறைக்கு உடனடியாகத் தெரியப்படுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான 53 வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பிட்ட கோட்டே பகுதியிலுள்ள சிறி ஜெயவர்த்தனபுர பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக்குச் சொந்தமான காணியிலிருந்தே இந்த வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

மிரிஹானை பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றையடுத்தே குறிப்பிட்ட பகுதி பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு வாகனங்கள் கைப்பற்றப்பட்டன.  இந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் ரக்ன லங்கா பாதுகாப்புப் பிரிவினரால் பாதுகாக்கப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.