செய்திகள்

ஜெனீவாவில் அரசின் அதிரடி காய்நகர்த்தல்: ஜயந்த தனபால மனித உரிமைகள் பேரவை செயலாளருடன் பேச்சு

இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பான ஐ.நா. விசாரணை அறிக்கை மார்ச் மாதத்தில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத் தொடரில் வெளியிடப்படவுள்ள நிலையில் இலங்கை ஜனாதிபதியின் சர்வதேச விவகாரங்களுக்கான ஆலோசகர் ஜயந்த தனபால ஜெனிவா விரைந்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாள் ஸெயித் அல் ஹுஸைனுடன் முக்கிய பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆட்சி அமைத்துள்ள புதிய அரசாங்கத்தின் கொள்கைகளை இந்தச் சந்திப்பில் ஜயந்த தனபால விளக்கியதாக இலங்கை ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை வெளிவரவுள்ள நிலையில் இடம்பெற்றுள்ள இந்தச் சந்திப்பு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தலைவர் உட்பட முக்கியமானவர்களையும் சந்தித்து இலங்கையின் புதிய அரசின் கொள்கைகள் அணுகுமுறைகளை தனபால விளக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டத்ததின் அடிப்படையில் ஜெனிவா விவகாரத்தை புதிய அரசாங்கம் கையாளும் என தனபால விளக்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.