செய்திகள்

ஜோதிகாவின் ‘36 வயதினிலே’, 20 கோடியை நெருங்குகிறதாம்

ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 36 வயதினிலே படம் பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது. முக்கியமாக இந்தப் படத்தின் வசூல் பிரமாதமாக இருப்பதாக படத்தை வெளியிடும் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்துடன் இணைந்து படத்தை வெளியிட்ட டிரீம் ஃபேக்டரி நிறுவனத்தின் தலைமை அதிகாரி சக்திவேல் கூறும்போது, ‘இந்தப் படத்தை தமிழ்நாடு முழுக்க 201 திரையரங்குகளில் வெளியிட்டோம். இதுவரை 7 கோடி ரூபாய் வசூல் கிடைத்துள்ளது.

இதே நிலைமை தொடர்ந்தால், எப்படியும் 18லிருந்து 20 கோடி ரூபாய் வரை சம்பாதித்துவிடும். பலகாலம் கழித்து திரையரங்குகளுக்கு குடும்பம் குடும்பமாக வந்து படத்தைப் பார்க்கிறார்கள். பல மல்டிபிளெக்ஸ்களில் இந்தப் படம் சிறிய திரையரங்கில் இருந்து பெரிய திரையரங்குக்கு மாற்றப்படுகிறது’ என்றார்.

மாயாஜால் மல்டிபிளெக்ஸின் மேலாளர் மீனாட்சி சுந்தரம், வசூல் நிலவரம் பற்றி கூறும்போது, ‘பொதுவாக எங்கள் மல்டிபிளெக்ஸில் இளைஞர்கள் தான் அதிகம் படம் பார்க்க வருவார்கள். ஆனால் முதல்முறையாக இந்தப் படத்தைப் பார்க்க குடும்பங்கள் நிறைய வருகின்றன. இது எங்களுக்குக் கிடைத்த பெரிய வெற்றி’ என்றார்.