செய்திகள்

டக்ளசின் செயற்பாடு அநாகரிகமானதும் சட்டமுரனானதும் என்று வடக்கு முதல்வர் ஜனாதிபதிக்கு கடிதம்

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் கடந்த டிசம்பர் 16 ஆம் திகதி நடைபெற்றபோது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தன்னிச்சையான முறையில் அனாவசியமான வன்முறை மற்றும் ஜனநாயக முறைகேடான செயற்பாடுகளில் ஈடுபட்டதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் ஊடாக கடும் அதிருப்தியையும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ள வட மாகாண சபை முதல்வர் சி. வி. விக்னேஸ்வரன், இது தொடர்பில் விசாரணை ஒன்றை நடாத்துமாறு ஜனாதிபதியை கேட்டிருகிறார்.

அத்துடன் , இந்த விசாரணை முடியும்வரை ஒருங்கிணைப்பு கூட்டங்களை இடைநிறுத்தி வைக்குமாறும் இது தொடர்பிலான செயற்பாடுகளை வட மாகாண சபை தலைமை ஏற்று முன்னெடுத்து செல்வதற்கு அனுமதியளிக்குமாறும் இன்று ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் அவர் கோரியிருக்கிறார்.
கலகம் செய்யும் வகையில் அமைச்சரும் அவரது விசுவாசிகளும் அன்றைய தினம் நடந்து கொண்டமையானது சட்ட முரணானதும், அநாகரிகமானதும் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஒழுகவேண்டிய நெறிகளுக்கு முரணானதும் என்றும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் வரும் இந்த சமயத்தில் அமைச்சரின் இந்த செயற்பாட்டை வட மாகாண வாக்களர்களை அச்சுறுத்தும் ஒரு நடவடிக்கையாகவும் அவர்களது உணர்வுகளை அலட்சியப் படுத்துவதாகவும் தான் கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.