செய்திகள்

டில்லி: பாஜக முதல்வர் பதவி வேட்பாளர் கிரண் பேடி

புதுடில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக முதல்வர் பதவி வேட்பாளராக, அண்மையில் அக்கட்சியில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி அறிவிக்கப்பட்டுள்ளார்.

கிழக்குத் தில்லியில் உள்ள கிருஷ்ணா நகர் தொகுதியில் அவர் போட்டியிடுவார் என அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா அறிவித்தார்.

ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற கிரண் பேடி, சமூக ஆர்வலராக மக்கள் நலன் சார்ந்த விவகாரங்கள், பெண் உரிமை பிரச்னைகளுக்காக குரல் கொடுத்து வந்தார்.

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே தொடங்கிய “ஊழலுக்கு எதிரான இந்தியா’ இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்றார். அந்த இயக்கத்தில் இருந்து அரவிந்த் கேஜரிவால் பிரிந்து ஆம் ஆத்மி கட்சியைத் தொடங்கிய போது, அவரைக் கடுமையாக விமர்சித்தவர்களில் கிரண் பேடி முக்கியமானவர்.

இந்நிலையில், தில்லியில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா முன்னிலையில் அக்கட்சியில் கிரண் பேடி கடந்த வாரம் இணைந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “டில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சி மேலிடம் விரும்பினால் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலை எதிர்த்துப் போட்டியிடுவேன்’ என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பாஜகவின் முதல்வர் பதவி வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஆலோசனை நடத்த பாஜக அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வருமாறு கிரண் பேடி கேட்டுக் கொள்ளப்பட்டார். அப்போது, டில்லி பாஜக முதல்வர் பதவி வேட்பாளராக கிரண் பேடியை அக்கட்சியின் தேர்தல் குழு பரிந்துரை செய்தது. இதையேற்று, கிரண் பேடியின் பெயரை டில்லி பாஜக முதல்வர் பதவி வேட்பாளராக அந்தக் கட்சியின் ஆட்சிமன்றக் குழு திங்கள்கிழமை இரவு அறிவித்தது.

இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ், நிதின் கட்கரி, வெங்கய்ய நாயுடு, அனந்த குமார், கட்சியின் தில்லி மாநிலத் தலைவர் சதீஷ் உபாத்யாய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.