செய்திகள்

தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டியல் மீளாய்வு: அமைச்சர் மங்கள அறிவிப்பு

தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் மற்றும் அதன் அமைப்புக்களின் பெயர் பட்டியலை புதிய அரசாங்கம் மீளாய்வு செய்யுமென வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் வருவதை அறிந்து மஹிந்த ராஜபக்ஷ நாட்டில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் உயிர் பெறுவதாக சித்தரிக்கும் வகையில் அவசர அவசரமாக இந்த தடைப் பட்டியலை தயாரித்திருந்தார்.

இதில் சுமார் 05 அல்லது 06 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதன் நம்பகத்தன்மையை மீள உறுதி செய்யும் நோக்கில் தடைப்பட்டியலை மீளாய்வு செய்யும் வேலைத்திட்டத்தில் புதிய அரசாங்கம் களமிறங்கியிருப்பதாகவும் அமைச்சர் சமரவீர கூறினார்.

இலங்கையில் நடை பெறவுள்ள புலம் பெயர்ந்தோருக்கான விழாவில் (Diaspora Festival)  தடைப்பட்டியலிலுள்ள வெளிநாடுகளில் வாழும் விடுதலைப் புலி உறுப்பினர்களும் கலந்துகொள்வார் களாவென அமைச்சர் சமரவீரவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கை யிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு விளக்கமளித்தார்.

புலம் பெயர்ந்து வாழும் இலங்கை யர்களை மீண்டும் தாய் நாட்டிற்கு அழைப்பதே இந்த விழாவின் நோக்கமாகும். எனினும் தடை செய்யப்பட்டுள்ள பட்டியலில் இருக்கும் அனைவரும் தீவிரவாதிகளா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. உயிரிழந்தவர்களின் பெயர்களும் அந்த பெயர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

2014 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அரசியல் நோக்கிலேயே இந்த தடைப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை நாம் மீளாய்வுக்குட்படுத்தி வருகின்றோம். அதற்கமைய உண்மையான தீவிரவாதிகளை எம்மால் அடையாளம் கண்டுகொள்ள முடியுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, நாம் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களுடனும் பேச்சு நடத்துகின்றோம். இதன்படி பிரிவினைவாதம் இல்லாத ஒன்றிணைந்த இலங்கையை உருவாக்க விரும்பும் ஒவ்வொருவருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும்.

புலம் பெயர் வாழ் இலங்கையர்களுடன் அரசாங்கம் பேச்சு நடத்த வேண்டுமென்பதே மஹிந்த ராஜபக்ஷவின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முக்கிய கொள்கையாகும். அவர் செய்ய தவறியதை நாம் செய்கிறோம். முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ தனது அறிக்கையை வாசிக்க தவறிவிட்டமைக்காக நான் வருந்துகிறேன் என்றும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.