செய்திகள்

தனிப்பட்ட எதிர்ப்பார்ப்பு எங்களுக்கு இல்லை. மக்களின் எதிர்ப்பார்ப்பே எமது எதிர்ப்பார்ப்பாகும்.

எங்கெழுக்கென தனிப்பட்ட அரசியல் எதிர்பார்ப்போ, ஆதாயம் தேடும் எண்ணமோ கிடையாது. நாங்கள் மக்களின் எதிர்ப்பார்ப்புக்காகவே இந்த அரசியல் களத்தில் இருக்கின்றோம். இவர்கள் எங்களை நிராகரிப்பார்களாயின் நாங்கள் எங்கள் தொழிலை பார்த்துக்கொண்டு இருந்து விடுவோம். இது எங்களுக்கு முடியாத காரியம் அல்ல. மற்றவர்களைப்போன்று ஐம்பது நூறு கோடிகளை செலவழித்து பாராளுமன்ற ஆசனத்தை பெற்றுக்கொள்ள முயற்சிக்கமாட்டோம். மக்களின் எதிர்ப்பார்ப்பு என்னவாக இருக்கிறதோ அதுவே எமது எதிர்ப்பார்ப்பாகும் என ராகலை சென்வேனாட்ஸ் தோட்டத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சிரேஸ்ட சட்டத்தரணியுமான பெ. இராஜதுரை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்…

இன்னும் 60 வருடங்கள் பின்நோக்கிப் பார்த்தால் அந்த அறுபது வருடங்களில் இங்குள்ள எம்மில் எத்தனை பேர் இருப்போம் என்பது எங்களுக்கு தெரியாது. நிச்சயமாக நாங்கள் இருக்க மாட்டோம். ஆனால் எமது குழந்தைகள், உறவுகள் இந்த இடத்தில் இருக்கத்தான் போகின்றன. அவர்களுக்கு நாங்கள் எதனை விட்டுவைத்து போகின்றோம் என்பதை பற்றியே நாங்கள் யோசிக்கின்றோம். இதனாலேயே இந்த அரசியல் செயற்பாட்டில் களமிறங்கவேண்டிய கட்டாயம் வந்திருக்கின்றது.

எதிர்வரும் நாட்களில் வெளிநாட்டு இறக்குமதிகள், பிற மாவட்டங்களில் இருந்து வருகைத்தருபவர்கள், பெரும் வியாபாரிகள் என்போர் உங்களின் வாக்குரிமையை களவாட இங்கு வருவார்கள். இவ்வாறான திருடங்களின் செயற்பாடுகளால் நாங்கள் தோல்வியடைவோம். அவர்களோடு எங்களுக்கு போட்டியிட முடியாது. அவர்கள் எங்களின் பலவீனங்களை பார்த்து சரியாக காய்களை நகர்த்தி எங்கள் வாக்குகளை களவாடி சென்று பின்னர் அடுத்த தேர்தலில் முகங்காட்டுவார்கள். நாங்கள் அப்போதும் அவர்களுக்கு நாங்கள் வாக்களிப்போம் என்பது உறுதியாக அவர்களுக்கு தெரியும். இந்த கபட விளையாட்டை இம்முறை அவர்கள் ஆட இடமளிக்க வேண்டாம்.

நாங்கள் எமது தொழிலில் பலருக்கு உதவிகளை செய்துள்ளோம். அதில் திருப்தி காண முடியவில்லை. அதனாலேயே அரசியலுக்குள்ளும் நுழைந்தோம். ஆனால் இந்த அரசியல் செயற்பாடுகளை பார்க்கும்போது இதிலிருந்து விலகிவிடலாம் என்றே தோன்றியது. ஆனால் எங்களோடு இருக்கின்ற நண்பர்கள் என்னை தொடர்ந்து இந்த பயணத்தில் அவர்களுக்கு தலைமைத்துவத்தை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே தொடர்ந்தும் நாங்கள் செயற்பட தீர்மானித்து செயற்படுகின்றோம். இம்முறை நடைபெறும் தேர்தலில் நாங்கள் தெரிவு செய்யும் நபர்கள் இன்னும் ஐந்து ஆண்டுகள் இருக்கப்போகிறார்கள். இருந்தால் பரவாயில்லை இவர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்பது எமக்கு தெரியாது. இந்த விடயத்தில் நீங்கள்தான் சிந்தித்து செயற்பட வேண்டும். இதில் உங்கள் முடிவை சரியாக எடுப்பீர்கள் என நாங்கள் நம்புகின்றோம் என்றார்.