செய்திகள்

தனியாக சந்தோஷமாக இருக்கிறேன்: த்ரிஷா

“நான் தனியாக சந்தோஷமாக இருக்கிறேன்” என்று நடிகை த்ரிஷா தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.

தடபுடலாக நடந்த நடிகை த்ரிஷா- சினிமா தயாரிப்பாளர் வருண்மணியன் நிச்சயதார்த்த விழா சில நாட்களிலே முடிவுக்கு வந்துவிட்டது. கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து விட்டனர். இது திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரிவுக்கான காரணத்தை இருவரும் தெரிவிக்கவில்லை. ஆனாலும் பிரிவு குறித்து பல்வேறு யூகங்கள் பரவிய வண்ணம் இருந்தன. திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்க கூடாது என்று த்ரிஷாவுக்கு வருண்மணியன் குடும்பத்தினர் தடை போட்டதாகவும், இது பிடிக்காமல் த்ரிஷா திருமணத்தை ரத்து செய்ததாகவும் கூறப்பட்டது.

ஆனாலும் திருமணம் ரத்தானது பற்றி த்ரிஷா மற்றும் வருண் மணியன் தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கபடவில்லை.

இந்த நிலையில் தற்போது த்ரிஷா டுவிட்டரில், “என்னை பற்றி நிறைய வதந்திகள் உலா வருகின்றன. அவற்றுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். நான் தனியாக சந்தோஷமாக இருக்கிறேன். இதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.