செய்திகள்

தமிழகத்திலுள்ள அகதிகளை திருப்பி அனுப்பக் கூடாது: ம.தி.முக. மகாநாட்டில் தீர்மானம்

தமிழகத்தில் இலங்கைத் தமிழ் அகதிகளை இலங்கைக்கு அனுப்ப முயலும் நடவடிக்கையை இந்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று மதிமுக வலியுறுத்தியுள்ளது.

இந்துத்துவா கொள்கைகள், பொருளாதாரக் கொள்கைகள், இலங்கைத் தமிழர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக மதிமுக தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 23-ஆவது பொதுக்குழு இன்று ஞாயிற்றுக்கிழமை த்துக்குடியில் நடைபெற்றது. இந்தப் பொதுக்குழுவில் நிறைவேற்றட்டப்பட்ட தீர்மானங்களி இலங்கைத் தமிழர் விவகாரமும் முக்கியமாக இடம்பெற்றுள்ளது.  இத்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

“இலங்கையில் ஜனவரி 8 ஆம் தேதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள ஈழத் தமிழர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றியதால் ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த மகிந்த ராஜபக்‌ஷ ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டு இருக்கின்றார்.

இலங்கையின் ஜனாதிபதியாக மைத்திரி பால சிறிசேன பொறுப்பு ஏற்ற பின்னர் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, ஜனவரி 19 ஆம் தேதி இந்தியாவுக்கு வந்து வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றார்.

இதனைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள ஈழத்தமிழர்களான ஏதிலிகளை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவதற்காக இலங்கை – இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு தமிழக அரசின் சார்பில் பிரதிநிதி ஒருவரை நியமிக்குமாறு மத்திய அரசு தமிழக அரசுக்கு அறிவுறுத்தி இருக்கின்றது.

இதற்குப் பதில் அளித்துள்ள தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இலங்கையின் வடக்கு-கிழக்கு பகுதிகளில் நிலைமை இதுவரை சீராகவில்லை, ராணுவ முகாம்கள் இன்னமும் தமிழர்கள் பகுதிகளில் நிலைகொண்டு இருக்கின்றது; எனவே, தமிழகத்தில் இருந்து ஈழத் தமிழ் ஏதிலிகளை இலங்கைக்கு அனுப்புவதற்கு இது உகந்த நேரம் அல்ல என்று மத்திய அரசுக்கு மிகச் சரியாகச் சுட்டிக்காட்டி இருக்கின்றார். ஈழத்தமிழ் அகதிகளை மைய அரசு இலங்கைக்கு அனுப்பக் கூடாது.

வடக்கு-கிழக்கு மாகாணங்களில் ஈழத் தமிழர்களின் பூர்வீக தயாகப் பகுதியில் இருந்து இராணுவ முகாம்களை உடனடியாக அப்புறப்படுத்தவும், 2009 இல் நடைபெற்ற போரில் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு, சொந்த நிலங்களையும் வீடுகளையும் இழந்து நிற்கும் ஈழத்தமிழ் மக்களுக்கு அவர்களின் உடைமைகள் திரும்பக் கிடைக்கவும் உரிய நடவடிக்கைகளை எடுக்க இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கின்றது.

இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கும், அவர்களின் மீன்பிடி கருவிகள், படகுகளைப் பறிப்பதற்கும் முற்றுப்புள்ளி வைத்து, தமிழக மீனவர்கள் அச்சம் இன்றி மீன்பிடித் தொழில் நடத்தவும், கச்சத் தீவு பகுதியில் மீன்பிடி வலைகளை உலர்த்துதல், ஓய்வு எடுக்கும் உரிமைகளை நிலைநாட்டவும் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைக் கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் 87 படகுகளை உடனடியாகத் திரும்பப் பெற இந்திய அரசு ஆவன செய்ய வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க. பொதுக்குழு வலியுறுத்துகின்றது.