செய்திகள்

தமிழர் வாழ்வில் இருந்து அழிந்து செல்லும் ஊஞ்சல் கலை

-கே.வாசு-

தமிழர் பாரம்பரிய கலைகள் பல இன்று இருந்த இடமே தெரியாது அழிந்து ஒழிந்து விட்டன. அந்த வகையில் மகுடியாட்டம், வேதாள ஆட்டம், சாட்டைக்குச்சி ஆட்டம், பொய்க்கால் ஆட்டம் போன்ற கலைகள் தம் இருப்பை இழந்து விட்டன. இன்றைய நாகரிக மோகம் இப்பாரம்பரிய கலைகளை ஓரம்கட்டி விட்டது. இக் கலைகளோடு தமிழரரின் பாரம்பரிய விளையாட்டுக் கலைகளில் ஒன்றான ஊஞ்சற் கலையும் தன் இருப்பை இழந்து வருகின்றது. தமிழர் வாழ்விலும், இந்து சமய வழிபாட்டு மரபுகளிலும் இணைந்ததாக காணப்பட்ட ஊஞ்சற்கலை நாளாந்த வாழ்வியலுடன் இணைந்திருந்தது. குழந்தையை துயில் கொள்ள வைக்க சேலையில் ஏணை கட்டி ஆட்டுதல், ஆலயங்களில் இறைவனை ஊஞ்சலில் இருந்தி ஊஞ்சல் பாட்டு பாடி ஆட்டி மகிழ்தல், சிறுவர்கள் – சிறுமியர்கள், பெண்கள் மரக்கிளைகளில் கயிற்றால் ஊஞ்சல் கட்டி ஆடுதல் என நாளாந்த வாழ்வில் இணைந்திருந்த ஊஞ்சற் கலை இன்று….?

தமிழர் பாராம்பரியத்தில் சங்ககாலத்தில் இருந்து இந்தக் கலை இருந்து வருகின்றது. குறிப்பாக சித்திரை வருடப்பிறப்பு காலங்களில் இளம் நங்கையரிடம் இக் கலை விளையாட்டாக பரிணமித்திருந்தது. ஊஞ்சல் என்பது உந்தி ஆடுவதைக் குறிக்கின்றது. அத்துடன் ஊக்கத்துடன் கூடிய மகிழ்வையும் கொடுக்கின்றது. இன்று எம்மிடையே பல மரபுக் கலைகளும், மரபு விளையாட்டுக்களும் மருவி விட்டன. போர்த் தேங்காய் உடைத்தல், கிட்டிப்புள், கொம்பு முறி, கழுவேறல், பாண்டி, கிளித்தட்டு, கபடி போன்ற விளையாட்டுக்கள் தேடிப் பொறுக்க வேண்டிய நிலையை அடைந்து விட்டன.

un1சித்திரை வருடப் பிறப்பை கொண்டாடும் இளம் பெண்கள் ஒன்று கூடி கிராமங்களில் பரந்து விரிந்த மரக் கிளையகளில் ஊஞ்சல் கட்டி சுற்றி நின்று ஆடி மகிழ்வது வழமையாக அக்காலத்தில் இருந்து வந்தது. தமிழ் இலக்கியங்கள் ஊஞ்சல் பற்றிய பல தகவல்களை தந்துள்ளன. இது பற்றிப் பாடாத கவிஞர்களே இல்லை எனலாம்.

‘ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஊர்க்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஏங்குதம்மா..’ எனவும்

‘வசந்த ஊஞ்சலிலே அசைந்த பூங்கொடியே..’ எனவும் பல்வேறு இயற்கை இரசனைகளுடன் இணைந்து இந்த ஊஞ்சற் சிறப்பிக்கப்பட்டிருக்கின்றது.

இத்தகைய பாரம்பரிய கலைகளை புத்துயிர் பெற வைப்பதில் தமிழ் ஊடகங்களுக்கும் பாரிய பொறுப்பு உண்டு. அதைவிடுத்து மரபு, பண்பாடு பேணாத கலைகளை பேணவும், காட்சிப்படுத்தவும் முயல்வது எமது இருப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்து விடும். பழையன கழிதலும் புதியன புகுதலும் இயல்பே. ஆயினும் அவை எமது பண்பாட்டை மேய்ந்து விடாது பாதுகாக்க வேண்டியது ஊடகங்களின் கடமை.

கன்னிப் பெண்கள் ஒன்று கூடி ஊஞ்சல்களிலே அடுகின்ற போது சித்திரை நங்கையாக உருவகித்து பாடியுள்ளார்கள்..

‘சிற்றாடை கட்டிவந்த சித்திரையாள வருக
தேசம் எங்கும் பெரும் சிறப்பை அள்ளி நீயும் தருக
குயிலோசை வரவேற்க குவலயத்தே வருக
சிற்றாடை உயர் வசந்த காலம் எனும் பூவையளே வருக… என சிறப்பாக ஊஞ்சற் கலையுடன் இணைந்து எமது இலக்கிய கவித்துறையும் வளர்ந்து வந்துள்ளது. பெண்களின் உடலை வலுவடையச் செய்து உடல் ஆரோக்கியத்திற்கான உடற் பயிற்சியாகவும் இது அமைகின்றது.

un2இவ்வாறாக தமிழர் வாழ்வில் அழியா இடம்பெற்றிருந்த இந்த ஊஞ்சல் கலை இன்று ஆலயங்களில் சிறப்பு பூஜை வழிபாடுகளில் ஊஞ்சல் பாட்டு பாடி இறைவனை ஊஞ்சலில் எழுந்தருளச் செய்து வழிபடப்படுகின்ற போதும், மக்களின் சாதாரண வாழ்வியலில் இருந்து அருகியே வருகின்றது. சில சிறுவர் பூங்காங்களில் இந்த ஊஞ்சல் காணப்பட்டாலும் வீடுகளிலும், கிராமங்களிலும் இதனைக் காணப்பது அரிதாகவே மாறியுள்ளது.

இன்று தமிழர் அடையாளங்கள், வரலாறுகள் திட்டமிட்ட வகையிலும் எமது அசமந்த போக்காலும் அழிக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் வருகின்றது. இந்த நிலை தொடரும் நிலையில் எதிர்கால சந்ததி தமிழர் வரலாறு தெரியாதவர்களாக இருக்க வாய்ப்பு உள்ளது. எனவேஇ தமிழர் பண்பாட்டுடன் கூடிய கலைகளையும்இ இத்தகைய விளையாட்டுக்களையும் பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உண்டு என்பதே உண்மை.

N5