செய்திகள்

தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து பாடம் கற்கத் தவறிய அல்கைடா இயக்கமும் பாகிஸ்தான் அரசும்

சிவா செல்லையா

அல்கைடா இயக்கத்தலைவர் ஒசாமா பின்லேடனை கொல்வதற்காக அமெரிக்கப் படைகள் மேற்கொண்ட படைநடவடிக்கை போன்றே, தலைவர் பிரபாகனை இந்திய அமைதிப்படை முற்றுகையிட வந்தது. அமெரிக்கப் படைகள் பாகிஸ்தானுக்கு அதிகாலை வேளை இரண்டு உலங்கு வானூர்த்தியில் சென்றது போலவே இந்தியப் படையும் பலாலியில் இருந்து விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு அதிகாலையில் உலங்கு வானூர்த்தியில் சென்றது. அமெரிக்கா அல்கைடா தலைவரின் மறைவிடத்தை அறிந்திருப்பது போலவே இந்தியப்படையும் விடுதலைப் புலிகளின் தலைவரின் மறைவிடத்தை அறிந்திருந்தது. உயர்தலைவரின் பாதுகாப்பில் உறக்கமற்ற விழிநிலை எவ்வளவு முக்கியம் என்பதும் ஆயுதத்துடன் வரும் எதிரியின் ஆயுதம் இயங்குமுன் ஆயுதத்தை இயக்குவதிலேயே வெற்றி தங்கி உள்ளது என்பதனையும் 1987ல் தமிழீழ விடுதலைப்புலிகள் வெளிப்படுத்தி இருந்தனர். அதாவது கொக்குவில் பிரம்படியில் தலைவரின் இருப்பிடத்தினை அண்மித்த எதிரிகளை வானத்தில் இருந்து பரசூட்மூலம் இறக்கும்போதே துப்பாக்கிகளால் இலக்கு வைத்துக் கொன்றொழித்துவிட்டனர். இச்சம்பவம் நடைபெற்றது யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் யாழ். பல்கலைக்கழக விளையாட்டுத்திடலில் ஆகும். இத்தாக்குதல் நிகழும்போது விடுதலைப்புலிகளின் தலைவர் தனது மனைவி பிள்ளைகளுடன் வெகு இலாவகமாக தனது இருப்பிடத்தில் இருந்து சிறிது தூரம் பாதுகாப்பாக பதுங்கு குழி வழியாக வெளியேறிவிட்டார்.

இந்திய அமைதிப்படையின் படைநடைவடிக்கையில் ஏற்பட்ட இத்தோல்வி இந்தியா இலங்கையில் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளின் தொடர் தோல்விக்குக் காரணமாக அமைந்து விட்டது.

ஒசாமா பின்லேடனின் இறுதிக் கணங்கள் காணொளியினைப் பார்வையிடும்போது அல்கைடா இயக்கமும் பாகிஸ்தான் புலனாய்வுப் பிரிவும் இலங்கையில் இந்திய இராணுவம் கற்றுக்கொண்ட இராணுவத் தோல்விகளை அலசி ஆராயாமை தெரிகின்றது. அன்றேல் எவ்வளவு தொலைத்தொடர்பு வசதிகள், தொழில்நுட்ப வசதிகள் உள்ள சூழலில் தமது இலக்கினை பாதுகாப்பதில் ஏற்படுத்த வேண்டிய இரண்டாம், மூன்றாம் கட்ட விழிநிலைகளில் தவறுவிட்டு இருக்க மாட்டார்கள்.

தற்போது ஆப்காஸ்தானில் அமெரிக்கப்படைகளின் விலகல் 1990களில் இலங்கையில் இந்தியப் படைகளின் விலகலுக்கு ஒப்பானது. ஆயுதப் போராட்டத்தின் வெற்றியும் தோல்வியும் மாறிமாறிவரும். அடக்கப்படும் மக்களின் அழிவிற்கு யாரும் பொறுப்புக்கூற மாட்டார்கள். உலக வல்லரசுகளின் நலன்களின் சார்பே ஆயுத இன மோதல்களில் பிரதிபலிக்கப்படும். தற்போதைய உலக ஒழுங்கில் சீனாவின் வளர்ச்சி, ஐக்கிய அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் மனித உரிமை பேணல் என்ற பெயரில் ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் நேரடியாகவோ மறைமுகமாகவோ தலையிடுவதில் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளமையை ஆப்காஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகளின் விலகல் எடுத்துக்காட்டியுள்ளது. மேலும் ஈராக்கிடம் பேரழிவைத்தரும் ஆயுதங்கள் உள்ளதாகப் பொய்யினைக்கூறி ஆக்கிரமித்து சதாமினைக் கொன்ற ஐக்கிய அமெரிக்காவினால் தற்போது உலகில் பேரழிவை ஏற்படுத்திய சீனாவின் பொறுப்பற்ற செயலுக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க முடியாது திணறுகின்றது.

ஈழத்தமிழர்களும் ஆப்கானிஸ்தான் அனுபவங்களில் இருந்து சில பாடங்களைக் கற்றுக்கொள்ளல் அவசியம்.