செய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு விசேட குழு: திங்கட்கிழமை கூடுகிறது

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றை சொலிசிட்டர் ஜெனரல் அமைத்துள்ளதுடன் இக்குழு எதிர்வரும் திங்கட்கிழமை பிற்பகல் 2 மணிக்குக் கூடி அரசியல் கைதிகளை விடுவிக்கும் முறைமை தொடர்பில் ஆராயவுள்ளதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சொலிசிட்டர் ஜெனரலை அவரது அலுவலகத்தில் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஏம்.ஏ. சுமந்திரன் நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற சந்திப்பு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுதந்திரன் தெரிவிக்கையில் ;

அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் குறித்து சொலிசிட்டர் ஜெனரல் சுகத கம்லத்துடன் நீண்ட நேரம் பேச்சு நடத்தப்பட்டது. இதன் பிரதிபலனாக இது தொடர்பில் ஒரு சிறு குழு அமைக்கப்படுமென அவர் என்னிடம் தெரிவித்தார்.

இக்குழுவில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள கைதிகளின் விவகாரங்களை கையாளும் அதிகாரிகள் அடங்குகின்றனர். இக் குழு எதிர்வரும் திங்கட்கிழமை பிற்பகல் 2 மணிக்குக் கூடி அரசியல் கைதிகள் ஒவ்வொருவரின் விடயங்களை ஆராய்ந்து விடுவிக்கும் முறைமை தொடர்பில் தீர்மானிக்கவுள்ளது.

அரசியல் கைதிகளில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்கள், நீதிமன்றத்தில் வழக்கு உள்ளவர்கள், தண்டனை விதிக்கப்டப்டவர்கள் என மூன்று பிரிவினர் உள்ளனர் என்றார். இதன்போது ஊடகவியலாளர்கள் கைதிகளின் விருப்பமில்லாது புனர்வாழ்வுக்கு அனுப்பப்படுவது தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு சுமந்திரன் பதிலளிக்கையில் ;

“புனர்வாழ்வுக்கு கைதிகள் அனுப்பப்படுவதன் மூலம் அவர்கள் விடுவிக்கப்படுவது உறுதியாகின்றது. 900 அரசியல் கைதிகள் உள்ள நிலையில் 300 ஆக குறைந்ததற்கு புனர்வாழ்வுக்கு அனுப்பப்ட்டதே காணரமாகும். .இதனை சட்ட ரீதியாக ஏற்றுக் கொள்ள முடியாது ஆயினும் நடைமுறையில் விடுதலை சாத்தியமாகியுள்ளது. விடுவிக்க உதவியாகவுள்ளது” என்றார்.

“தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் கைதிகள் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்கவில்லையென கூறப்படுவதில் உண்மையில்லை. என்னிடம் எந்தெந்த சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் உள்ளனர் என்ற விபரம் உள்ளது. கைதிகள் பொது மன்னிப்பு அளிக்குமாறு எழுதிய கடிதமும் உள்ளது. கடந்த அரசாங்கத்திடம் இது குறித்து பேசினோம். எனினும் செயற்படவில்லை. இவ்வாறான நிலையில் கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்கவில்லையென கூறுவது உண்மைக்கு புறம்பானதாகும்.

இறுதி யுத்தத்தில் போரிட்ட சுமார் 11 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு புனர்வாழ்வு இரு வருடங்களுக்கு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சாப்பாடு கொடுத்து மற்றும் சிறு குற்றம் இழைத்தவர்கள் வருடக்கணக்கில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். நாட்டில் பயங்கரவாதம் இல்லாத நிலையில் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும்” என்றார்.