செய்திகள்

தமிழ் தேசியவாதம் மீண்டுமொரு யுத்தத்திற்கு தயாரா?

யதீந்திரா
அரசியல் என்பது இயங்குநிலையாகும். அந்த இயங்குநிலை வெற்றியையும் தரலாம். தோல்வியையும் தரலாம். தோல்விகள் ஏற்படுகின்ற போது, அது அனுபவமாகின்றது. இலங்கை தமிழரசு கட்சி உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து, பல பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால் எதுவுமே வெற்றியில் முடியவில்லை. செல்வநாயகம் தலைமையிலான தமிழரசு கட்சியின் காலம் தோல்வி. அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியின் காலம் தோல்வி, ஜந்து இயக்கங்களின் காலம் தோல்வி. விடுதலைப் புலிகளின் காலம் தோல்வி. இது சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் காலம். இதுவரையில் சம்பந்தனால் முன்னெடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்விலேயே முடிந்திருக்கின்றன. இவ்வாறானதொரு பின்னணியில்தான், மீண்டுமொரு பேச்சுவார்த்தை தொடர்பில் பேசப்படுகின்றது.

கடந்தகால பேச்சுவார்த்தைகளை ஆழமாக எடுத்து நோக்கினால், ஒரு விடயம் வெள்ளிடைமலை. அதாவது, சிங்களவர்களோடு உள்நாட்டுக்குள் இடம்பெற்ற முயற்சிகள் அனைத்துமே தோல்வியில்தான் முடிந்திருக்கின்றது. வெளிநாட்டு தரப்புக்களின் தலையீட்டோடு இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் கணிசமான தூரம் சென்றிருக்கின்றது. இதில் இந்திய-இலங்கை ஒப்பந்தம் மட்டுமே ஒரு தீர்வில் முடிவுற்றது. அது தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகள் மத்தியில் மாறுபட்ட அப்பிராயங்கள் இருந்த போதிலும் கூட, கடந்த 73 வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட பல்வேறு நகர்வுகளுக்கு மத்தியில், நீடித்து நிலைக்கும் விடயமென்றால், அது இந்திய-இலங்கை ஒப்பத்தின் கீழ் கிடைக்கப்பெற்ற மாகாண சபை முறைமை ஒன்றைத்தான் கூறமுடியும்.

ஒஸ்லோ பேச்சுவார்த்தை ஒரு கணிசமான தூரம் சென்றிருந்த போதும், பேச்சுவார்த்தையில் நிர்பந்தத்தை பிரயோகிக்கக் கூடியநிலையில், நோர்வே இருந்திருக்கவில்லை. நோர்வே ஒரு வெறும் மத்தியஸ்தர் மட்டுமே! இந்த இரண்டு சந்தர்ப்பங்களை தவிர, அனைத்து முயற்சிகளும் ஏமாற்றங்களுடன்தான் முடிவுற்றிருந்தது. இதன் மூலம் கிடைக்கும் படிப்பினை என்ன? சிங்கள தரப்புக்களோடு பேச்சுவார்த்தைக்கு செல்கின்ற போது, நிர்பந்தத்தை ஏற்படுத்தக் கூடிய பலம் தமிழர் பக்கத்திலிருக்க வேண்டும். ஒன்றில் சொந்த பலமிருக்க வேண்டும் அல்லது வெளியாரின் ஆதரவிருக்க வேண்டும். செல்நாயகம் தலைமையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது, ஒப்பீட்டடிப்படையில் மக்களை அணிதிரட்டிப் போராடக் கூடிய ஆற்றுலுடன்தான் தமிழரசு கட்சியிருந்தது. ஆனால் அவ்வாறான போராட்டங்களை தென்னிலங்கை கருத்தில்கொள்ளவில்லை ஏனெனில் தென்னிலங்கைக்கு நெருக்கடி கொடுக்கக் கூடியதாக அவைகள் இருந்திருக்கவில்லை. இவ்வாறானதாரு பின்புலத்தில்தான் செல்வநாயகம் பிராந்திய அரசியல் சூழலால் ஏதும் விமோசனங்கள் ஏற்படாலாமென்று நம்பி, தனிநாட்டு கோரிக்கை தொடர்பில் சிந்தித்தார். தனிநாட்டு கோரிக்கையென்பது சொந்த பலத்திலிருந்து எழுந்த கோரிக்கையல்ல. பிரபாகரன்தான் அதனை சொந்த பலத்தோடு தொடர்புபடுத்தினார். ஆனால் செல்வநாயகம் எதிர்பார்த்த பிராந்திய அரசியல் சூழல் பிற்காலத்தில்தான் கனிந்தது. இந்தியத் தலையீட்டின் போது, இந்தியா முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறைகளை பிரயோகித்திருந்தது. இந்தியாவின் தலையீடு அடிப்படையிலேயே, கொழும்மை கட்டுப்படுத்துவதாக இருந்தது. இராணுவரீதியான தலையீட்டுக்கு முன்னர், தமிழ் ஆயுத இயக்கங்களின் படைவலுவை அதிகரித்தது. ஒரே நேரத்தில் இரண்டு வகையான இராணுவ தலையீடுகளை மேற்கொண்டது.

தமிழ் ஆயுத இயங்களை பயிற்சியளித்து ஊக்குவித்தது, பின்னர், அதனையடிப்படையாகக் கொண்டு, அமைதிக்கான இராணுவத் தலையீட்டை மேற்கொண்டது. இந்த இரண்டு அணுமுறைகளின் விளைவாக வந்ததே, இந்திய-இலங்கை ஒப்பந்தமும், 13வது திருத்தச்சட்டத்தினடிப்படையிலான மாகாண சபை முறைமையுமாகும். இந்திய – இலங்கை ஒப்பந்தமும் மாகாண சபை முறைமையும் பின்னிப்பிணைந்திருக்கின்றது. இதில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமாயின், இந்தியாவின் அனுமதி தேவை. ஏனெனில் இது இரண்டு நாடுளுக்கிடையிலான ஒப்பந்தம். இரண்டு சிறிய நாடுகளுக்கிடையிலான அல்லது ஒரு பெரிய நாட்டுக்கும் சிறிய நாடுகளுக்குமிடையிலான உடன்பாட்டை பெரிய நாடு மீறுகின்ற போது, சிறியநாடுகள், சர்வதேச நீதிமன்றத்தை நாடும். ஆனால் இந்தியா போன்றதொரு நாடு எவ்வாறு விடயங்களை கையாளுமென்பதை, கொழும்பு நன்கறியும். இதன் காரணமாகவே ஏதோவொரு வகையில், மாகாண சபை முறைமையை விரும்பியோ, விரும்பாமலோ கொழும்பின் ஆளும்தரப்புக்கள் பாதுகாத்தே வந்திருக்கின்றன. ஆனால் தமிழ் அரசியல் கட்சிகள், அதனை பயன்படுத்துவதில் அக்கறையற்றிருந்தமையால் அல்லது அதற்கப்பால் செல்வது தொடர்பிலும், சமஸ்டிபற்றியும் பேசிவந்ததாலும், 13லுள்ள விடயங்களை பலவீனப்படுத்தும், நகர்வுகளையே கொழும்பு இதுவரையில் முன்னெடுத்துவந்திருக்கின்றது. தமிழ் அரசியல் தலைமைகள் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தாத நிலையில், இந்தியாவும், தமிழர்களின் பேரால் தலையீடு செய்கின்ற நிலையிலிருந்து விலகியிருந்தது.

ராஜதந்திர அணுகுமுறையில், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மீதான உரித்தை நினைவுபடுத்தும் வகையில் அவ்வப்போது 13வது திருத்தச்சட்டத்தை உச்சரித்துக் கொண்டது. ஏனெனில் தேவையுள்ள தமிழர்கள் அதனை கையாளுவதற்கு அல்லது அதிலிருந்து முன்நோக்கி செல்வதற்கு முயற்சிகளை செய்யாத நிலையில், இந்தியா அதில் தலையீடு செய்வதற்கான எந்தவொரு சந்தர்ப்பமுமில்லை. இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.ஜெயசங்கர், கூட்டமைப்பினுடனான சந்திப்பின் போது, ஒரு விடயத்தை தெளிவாக கூறியிருந்தார். 13வது திருத்தச்சட்டத்தினடிப்படையில் இந்தியா அப்பிராயங்களை கூறும், தலையீடுகளை செய்யும் ஆனால் சமஸ்டிப்படையிலான அரசியல் விடயமென்றால் அதனை நீங்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். சமஸ்டியப்படையிலான அரசியல் ஏற்பாடொன்றிற்கு அரசாங்கம் இணங்கினால் அதில் எவருக்கும் பிரச்சினையில்லை ஆனால், அதனை நீங்கள் அரசாங்கத்துடன் மட்டும்தான் பேச வேண்டுமென்பதுதான் அதன் பொருள். இங்குள்ள பிரச்சினை அரசாங்கத்துடன் பேசி, அவ்வாறானதொரு அரசியல் தீர்வை அடைய முடியாது. இவ்வாறானதொரு நிலையில்தான் சமஸ்டியை இலக்காக வைத்திருந்தாலும் கூட, தற்போதிருப்பதை உச்சளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் தமிழர்களுக்கு ஏற்படுகின்றது.

இல்லை – இதனை நாங்கள் பயன்படுத்தப் போவதில்லை. தாண்டிச் செல்லப் போகின்றோமென்றால், அவ்வாறு கூறுவதில் தவறில்லை ஆனால் அதனை கூறிக்கொண்டுமட்டும் இருப்பதால் எதுவும் அசையாது. தாங்கள் விரும்புகின்றவாறு அரசியல் அசையவேண்டுமென்று எண்ணுபவர்கள், முதலில் தாங்கள் அசைய வேண்டும்;. ஆதன் பின்னரே மக்களை அசைக்க முயற்சிக்க வேண்டும். ஆனால் அதற்கான அரசியல் ஆளுமைகள் எவருமே தமிழ்ச் சூழலில் இல்லை. ஆகக் குறைந்தது, அமிர்தலிங்கம் போன்ற ஒரு மிதவாத தலைவர் கூட இன்றில்லை. மேலும் தமிழ் மக்களும் இவ்வாறான அரசியல் பரிசோதணை முயற்சிகளுக்கு ஒத்துழைக்கப் போவதில்லை.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஒரு நண்பர் கூறினார். ஒரு கப்பலை அனுப்பி, விரும்பியவர்கள் அனைவரும் ஏறுங்கள், பாதுகாப்பாக ஜரோப்பில் கொண்டுசேர்க்கின்றோமென்றால், இங்கு எவருமே இருக்கப் போவதில்லை. பிரச்சினை ஒரு கப்பல் போதாதென்பது மட்டும்தான். மக்களை பொறுத்தவரையில் சமஸ்டி பற்றியோ, ஏன் 13வது திருத்தம் தொடர்பிலோ சிந்திக்கும் நிலையிலில்லை. நாங்கள் பொதுவாக மக்களென்று கூறிக் கொண்டாலும் கூட, தமிழ் தேசிய அரசியலால் பஞ்சப்பராரிகளாக்கப்பட்ட தமிழ் மக்கள் பற்றித்தான் இந்தக் கட்டுரையாளர் குறிப்பிடுகின்றார். மக்களை நாங்கள் தொடர்ந்தும் அரிசிக்கும் பருப்புக்கும் கையேந்தும் நிலையில் வைத்துக் கொண்டு, இலட்சியவாதங்கள் தொடர்பில் பேசுவதில் பயனில்லை. இறுதியில் சீனாவும் தமிழ் மக்களுக்கு அரிசி வழங்குகின்றது. அசிரி வழங்குவதன் மூலம், வடக்கு கிழக்கில் காலூன்றலாமென்று சீனா கருதுகின்றளவிற்கு, நிலைமைகள் மாறியிருக்கின்றன. தமிழ் மக்களின் நிலைமை கையேந்தி நிலைக்கு தாழ்ந்திருக்கின்றது. இதில் என்ன பெருமையுண்டு?

இந்த நிலைமையை போக்கும் வகையில், தமிழ் தேசிய தரப்புக்கள் செயலாற்றவில்லையாயின், தமிழ் தேசியமென்பது, வெறுமனே சிலர் உச்சரிக்கும் விடயமாகிவிடும். இந்தக் கட்டுரையாளர் சில வருடங்களுக்கு முன்னர் எழுதிய கட்டுரையொன்றில் குறிப்பிட்டது போன்று, இறுதியில் தமிழ் தேசியமென்பது, அமெரிக்காவில் கம்யூனிசம் பேசுவது போன்றாவிடும். அமெரிக்காவில் கம்யூனிசம் பேசினால், அதனை அமெரிக்க ஆளும் வர்க்கம் பெரிதாக பொருட்படுத்தாது. தாராளமா பேசலாம் ஏனெனில் அவ்வாறு பேசும் எவருமே, செயலுக்குச் செல்லும் வல்லமையில்லையில்லாதவர்கள். அமெரிக்க மக்கள் அவ்வாறான கம்யூனிச கதையை நகைச்சுவையாக கடந்துவிடுவர். செயலுக்கு செல்லாத கருத்தியல்கள், நிலைப்பாடுகள் தொடர்பில் ஆளும் வர்க்கம் அலட்டிக் கொள்வதில்லை. விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் கூட, கொழும்பிலிருந்து தமிழ் தேசியம் பேசியவர்கள் இருந்தனர். ஊடகங்களில் அவ்வாறானவர்கள் இருந்தனர். ஆனால் அவர்களால் கொழும்பில் பாதுகாப்பாகவும் மகிழ்சியாகவும் இருக்க முடிந்தது. ஏனெனில் அவர்கள் பேசும் தேசியத்தால் ஆளும் வர்க்கத்தை அசைக்க முடியாது. எப்போது ஆளும் வர்க்கத்தின் இருப்பிற்கு ஒரு கருத்து அல்லது நிலைப்பாடு அச்சுறுத்தலாக மாறுகின்றதோ, அப்போதுதான் அதன் மீது அவர்களது பார்வை திரும்பும். இப்போது. வடக்கு கிழக்கிலிருந்து தமிழ் தேசியத்தை உச்சரிப்போரை கொழும்பு பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

இந்த பின்புலத்தில் நோக்கினால் தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் என்ன செய்ய முடியுமென்னும் கேள்வியுடன்தான், தமிழ் தேசிய அரசியல் தரித்துநிற்கின்றது. இரண்டு தெரிவுகள்தான் உண்டு. ஒன்று கிடைக்கும் சந்தர்பங்கள் ஒவ்வொன்றையும் உச்சபட்சமாக பயன்படுத்திக் கொண்டு, தமிழ் மக்களின் இருப்பை உறுதிப்படுத்தும் வகையில் செயற்படுவது. இரண்டு, அதற்கு தயாரில்லையென்றால், போராடுவது. அந்தப் போராட்டம் இதுவரையில் இடம்பெற்ற அனைத்து போராட்டங்களையும் கடந்துநிற்பதாகவும், கொழும்மை மட்டுமல்ல, பிராந்திய சக்தியான இந்தியாவையும் திரும்பிப் பார்க்கும் வகையில் அமைந்திருக்க வேண்டும். அப்படியொரு போராட்டத்தை தமிழர்களால் முன்னெடுக்க முடியுமா? மக்களை தங்கள் பின்னால் திரண்டுவரச் செய்யக் கூடிய தமிழ் ஆளுமைகள் இருக்கின்றனரா? எழுக தமிழ், பொத்துவில் – பொலிகண்டி இந்த அணுகுமுறைகள், அதே போன்று, அண்மையில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவென்னும் பெயரில் முன்னெடுக்கப்படும் அரசுசாரா நிறுவனங்களின் சமஸ்டிக் கதைகள், அனைத்துமே தோல்வியுற்ற அணுகுமுறைகளாகும். இவ்வாறான அணுகுமுறைகளுக்கு கொழும்பு இறங்கிவருமென்றால் நிலைமைகள் எப்போதே மாறியிருக்க வேண்டுமல்லவா! நாங்கள் தொடர்ந்தும் மக்களை ஏமாற்றும் வகையில், அரசியல் ஆதாயங்களுக்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதால், ஒரு போதுமே முன்னோக்கி பயணிக்க முடியாது. ஒன்றில் இருப்பதிலிருந்து செல்ல வேண்டும் அல்லது அடையும் வரையில் போராட வேண்டும். அவ்வாறானதொரு போராட்டமென்பது இரத்தம் தோய்ந்தது. இன்றைய உலக ஒழுங்கில் இரத்தோய்ந்த போராட்டங்களின் பெயர் யுத்தமாகும். தமிழ் தேசியவாதம் மீண்டுமொரு யுத்தத்திற்கு தயாரா?