செய்திகள்

தமிழ் நாட்டின் எல்லையை விளங்கிக்கொள்ளல்

யதீந்திரா

தமிழ் நாட்டில் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. பத்துவருடங்களுக்கு பின்னர் மீளவும் திராவிட முன்னேற்ற கழகம், அதிகாரத்தை கைப்பற்றியிருக்கின்றது. இதனைத் தொடர்ந்து, அனைவரது பார்வையும் தீடிரென்று தமிழ் நாட்டின் பக்கமாக திரும்பியிருக்கின்றது. கருணாநிதியை துரோகியென்று கூறுபவர்களை தவிர, அனைத்து அரசியல் தரப்பினருமே, பாரபட்சமில்லாமல், ஸ்டாலின் மீதான எதிர்பார்ப்பை வெளியிட்டிருக்கின்றனர்.

இது ஒரு பக்கமென்றால் – இன்னொரு பக்கமும் இருக்கின்றது. அதாவது, சீமான் மூன்றாவது சக்தியாக வந்துவிட்டதான கொண்டாட்ட மனோநிலை. இப்போதும் விடுதலைப் புலிகளை தங்களின் அரசியல் முதலீடாகக் கொண்டிருப்பவர்கள் மத்தியில், சீமானை ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கும் போக்கிருக்கின்றது. இவ்வாறான சிந்தனை புலம்பெயர் நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டது. சீமானுக்கு ஏராளமான நிதி, புலம்பெயர் தமிழர்களிடமிருந்து செல்வதாகவும் ஒரு கருத்துண்டு. விரைவில் சீமான் ஒரு தொலைகாட்சி நிறுவனத்தை ஆரம்பிக்கப் போவதாகவும் கூட, ஒரு தகவலுண்டு.

தமிழ் நாட்டு அரசியலின் மீதான கரிசனை எங்கிருந்து வருகின்றது? தமிழர் அரசியல் நாடாளுமன்ற அரசியல்வாதிகளிடமிருந்து, ஆயுதப் போராட்ட அமைப்புக்களின் கைகளுக்குள் சென்றதன் பின்னணியில்தான், இந்த விடயம் ஈழத் தமிழர் அரசியலுக்குள் நுழைந்தது. அதற்கு முன்னரும் கூட, தொடர்புகள் இருந்திருக்கின்றது ஆனால் ஆயுதப் போராட்ட அமைப்புக்களின் எழுச்சிக்கு பின்னர்தான், தமிழ் நாடு, ஈழத் தமிழர் அரசியலுக்கான பின்தளமாக பயன்படும் சூழல் உருவாகியது. அனைத்து பிரதான இயக்கங்களுமே தமிழ் நாட்டில் தளமைத்து செயற்பட்டன. அனைத்து இயக்கங்;களுக்கும் போதிய ஆதரவு தமிழ் நாட்டில் இருந்தது. அனைத்து இயக்கங்கங்களின் தலைவர்களும் தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்தனர்.

தமிழ் நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளுடனும் இயக்கங்களின் தலைவர்கள் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்தனர், இதனால் தமிழ் நாட்டில் மிகவும் சுதந்திரமாக செயற்பட முடிந்தது. இந்த சுதந்திரம், வீதிகளில், தங்களுக்குள் ஆயுதங்களால் மோதிக்கொள்ளுமளவிற்கும் சென்றிருந்தது. தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் செயலதிபர் உமாமகேஸ்வரனும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனும் வீதியில் துப்பாக்கிகளால் மோதிக் கொண்ட கதை மிகவும் பிரபல்யமானது. ஆனால் இங்கு கவனிக்க வேண்டிய விடயம் – அதாவது, இந்த விடயங்கள் அனைத்துமே இந்திய மத்திய அரசின் கண்காணிப்புக்குள்தான் இருந்தது. ஒரு கட்டம்வரைக்கும், ஈழ அமைப்புக்கள் வளர்வதை இந்தியாவும் விரும்பியிருந்தது. இதன் காரணமாகத்தான் பின்னர் இயக்கங்களுக்கு பயிற்சியும் நிதியும் வழங்கியது.

தமிழ் நாட்டில் முகாமைத்து, இயக்கங்கள் செயற்பட ஆரம்பித்த போதுதான், பிறிதொரு பிரச்சினையும் மெதுவாக வேர்கொண்டது. தமிழ் நாட்டு அரசியலில், யார் மேலாதிக்க செலுத்துவதென்னும் போட்டியில் ஈடுபட்டிருந்த பிரதான கட்சிகளான தி.முகவும், அ.இ.தி.மு.கவும் தங்களின் தேர்தல் அரசியல் நலனிலிருந்தும் இயக்கங்களை கையாள முற்பட்டன. ஏனெனில், தமிழ் நாட்டு சாதாரண மக்கள் மத்தியில் ஈழத் தமிழர்கள் தொடர்பில் உணர்வுபூர்வமான ஆதரவிருந்தது. இந்த பின்புலத்தில்தான் கருணாநிதியும் எம்.ஐp.இராமச்சந்திரனும் இயக்கங்களின் தலைவர்களை தங்களது செல்வாக்கிற்குள் வைத்துக் கொள்வதற்கான போட்டியில் இறங்கினர். தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது. புளொட் இயக்கத்தின் தலைவர் உமாமகேஸ்வரன் எம்.ஐp.ஆருடன் நெருக்கமாக இருந்தார். இது ஒரு கட்டத்துடன் முடிவுக்கு வந்தது. பின்னர் பிரபாகரன் – எம்.ஐp.ஆர். நெருக்கம் ஆரம்பித்தது. விடுதலைப் புலிகள் எம்.ஐp.ஆருடன் நெருக்கமாகியதை, கருணாநிதியால் சகித்துக்கொள்ள முடியவில்லை. டெலோ – கருணாநிதி நெருக்கத்தை எம்.ஐp.ஆரால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

1986இல் விடுதலைப் புலிகள் இயக்கம், டெலோவை தாக்கியது. இதன் போது பெருமளவான டெலோ உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். டெலோவின் தலைவர் சிறிசபாரத்தினமும் கொல்லப்பட்டார். அத்துடன் அவ்வியக்கம் முடமாகியது. இதற்கும் தமிழ் நாட்டு அரசியலுக்கும் தொடர்புண்டா என்பதில் ஒரு மர்ம முடிச்சு, இன்றுவரையில், அவிழ்க்கப்படாமலேயே இருக்கின்றது. ஏனெனில் டெலோ கருணாநிதியால் போசிக்கப்படும் ஒரு அமைப்பாகவும், விடுதலைப் புலிகள் எம்.ஐp.ஆரால் போசிக்கப்படும் ஒரு அமைப்பாக இருந்த நிலையில்தான், டெலோவை விடுதலைப் புலிகள் தாக்கி அழித்தனர். டெலோவின் தலைவர் சிறி சபாரத்தினம் புலிகளால் கொல்லப்பட்டார். அந்தக் காலத்தில் எம்.ஐp.ஆர் வழங்கி நிதியுதவி, விடுதலைப் புலிகளின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றியிருந்தது. எனவே, எம்.ஜீ.ஆர் – கருணாதி மோதல் டெலோவின் அழிவின் மூலம் தீர்த்துக் கொள்ளப்பட்டதா?

இந்த இடத்தில், நான் இந்த விடயங்களை பதிவு செய்வதற்கு ஒரு காரணமுண்டு. தமிழ் நாட்டு அரசியல்வாதிகளை அதிகமாக நம்பும் அரசியல் போக்கொன்று இப்போதும் இருக்கின்றது. குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் செயற்படும் அரசியல் குழுக்கள், தமிழ் நாட்டின் மீது அதீதமான நம்பிக்கையை வைத்திருக்கின்றன. இதன் காரணமாகவே, இந்த விடயங்களை இங்கு விவாதிக்க வேண்டியேற்பட்டது. ஏனெனில் தமிழ் நாட்டு அரசியலில் எந்தவொரு கட்சி சார்பும் ஈழத் தமிழர்கள் மத்தியில் இருக்கக் கூடாது. அவ்வாறிருந்தால், அது தமிழ் நாட்டின் அரசியலுக்கு பயன்படும் அனால் ஈழத் தமிழர்களுக்கு ஒரு போதும் பயன்படாது. இதனை சுட்டிக் காட்டுவதற்காகவே சில வரலாற்று சம்பவங்களை இந்த இடத்தில் நினைவுபடுத்தினேன்.

ஏன் பயன்படாது? இந்தக் கேள்விக்கான பதிலை தேடவேண்டுமாயின், இந்த இடத்தில், பிறிதொரு கேள்வியையும் நாம் கேட்டுக்கொள்ள வேண்டும். அதாவது, தமிழ் நாட்டு அரசியல் ஏன் ஈழத் தமிழர்களுக்கு தேவைப்படுகின்றது? பொதுவாக தமிழ் நாட்டை கையாள வேண்டும் – தமிழ் நாட்டோடு உறவுகளை வலுப்படுத்த வேண்டுமென்று வாதிடுவோர் எவருமே, தமிழ் நாடு ஏன் தேவைப்படுகின்றது என்பது தொடர்பில் விவாதிக்க முற்படுவதில்லை. ஈழத் தமிழர் நலன்சார்ந்து, இந்தியாவை கையாளுதல் என்னும் இலக்கிற்காகவே, தமிழ் நாடு, தேவைப்படுகின்றது. இந்த இலக்கில் இதுவரையில் ஈழத் தமிழர்களால் வெற்றிபெற முடிந்ததா? வெற்றிபெற்றிருந்தால் இந்தளவு பாரிய அழிவொன்றை தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் எதிர்கொண்டிருந்த போது, ஏன் தமிழ் நாட்டினால் காத்திரமான தலையீட்டை செய்ய முடியாமல் போனது? இந்திய மத்திய அரசின் மீது ஏன் அழுத்தங்களை பிரயோகிக்க முடியாமல் போனது? தமிழ் நாடு பார்த்துக் கொண்டிருக்கும் போதுதானோ அத்தனையும் நடந்து முடிந்தது? முள்ளிவாய்க்காலில் அனைத்தும் முடிந்துபோனது?

இந்த அனுபவத்திலிருந்து சிந்தித்தால், நாம் இரண்டு முடிவுகளுக்கு வரவேண்டியது அவசியம். ஒன்று தமிழ் நாட்டின் அரசியலாற்றலை, ஈழத் தலைவர்கள் என்போர், சரியாக விளங்கிக்கொள்ளவில்லை. இரண்டு, தமிழ் நாட்டின் மூலம் எதனை இந்திய மத்திய அரசிற்கு கொண்டுசேர்க்க வேண்டுமென்பதில் எமது அரசியல் செயற்பாட்டாளர்கள் மத்தியில் தெளிவின்மை. முதலில் ஒரு விடயத்தில் மிகத் தெளிவான பார்வை அவசியம். அதாவது, இந்திய மத்திய அரசின் ஆதரவுதான் பிரதானமானது. அதற்கு தமிழ் நாட்டால் என்ன செய்ய முடியும் என்பதே கேள்வி.

தமிழ் நாட்டில், தங்களை, ஈழத் தமிழர் ஆதரவாளர்களாக காண்பித்துக் கொள்பவர்கள் பலரும், இலங்கையின் களநிலைமைகள் பற்றி போதிய விளக்கமற்றவர்களாகவே இருக்கின்றனர். அவ்வாறானவர்களே தமிழீழம் பற்றி பேசுகின்றனர் – அதே வேளை அவ்வாறானவர்கள் தங்களை இப்போதும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாகவும் காண்பித்துக் கொள்கின்றனர். ஆனால் இந்தியாவின், ஈழத் தமிழர் தொடர்பான கொள்கை நிலைப்பாடானது அன்றிலிருந்து இன்றுவரையில் ஒரே மாதிரியாகவே இருக்கின்றது.

அதாவது, 1987 இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் போது, இந்தியா எவ்வாறான நிலைப்பாட்டை கொண்டிருந்ததோ, அந்த நிலைப்பாட்டைத்தான் இப்போதும் இந்தியா வலியுறுத்தி வருகின்றது. அவ்வாறாயின் இதுவரை காலம் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளோடு இணைந்து, இந்தியாவை கையாளுவதாக கூறியவர்கள், எதை சாதித்திருக்கின்றனர்? அதே வேளை, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல்கொடுப்பதாக காண்பித்துக் கொள்ளும் பிறிதொரு தரப்பினரோ, இந்தியாவின் பிரதான கட்சிகளான பி.ஜே.பி மற்றும் காங்கிரஸை எதிர்ப்பதற்கு, ஈழத் தமிழர் அரசியலை பயன்படுத்திக் கொள்கின்றனர். சீமானும் இந்த வகையான அரசியல்தரப்பை சேர்ந்த ஒருவர்தான். உண்மையில் இவர்கள் எவருமே ஈழத் தமிழர்களுக்கு நன்மை செய்யவில்லை, மாறாக, இந்தியாவில் ஈழத் தமிழர்களுக்கான எதிரிகளை அதிகரிக்கின்றனர். பிராமணியர்கள் ஈழத் தமிழர்களுக்கு எதிரானவர்களாக நிறுத்தப்பட்டமையை நாம் இந்த பின்புலத்தில்தான் புரிந்துகொள்ள வேண்டும். உண்மையில் ஈழத் தமிழ் சமூகத்திற்கும் பிராமணிய எதிர்ப்பிற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. பிராமணியர்கள் ஈழத்தில் ஒரு ஆதிக்க சமூகமும் இல்லை. ஆனால், தமிழ் நாட்டு அரசியல்வாதிகளோ, தங்களின் திராவிடவாத, பிராமணிய எதிர்ப்பிற்காக, ஈழத் தமிழர்களை பலிக்கிடவாக்கினர். ஈழ-அரசியல் குழுக்களும் திராவிடவாத, பிராமணிய எதிர்ப்பிற்குள் தேவையில்லாமல் வீழ்ந்து போயினர்.

ராஜீவ் காந்தியின் கொலைக்கு பின்னர், தமிழ் நாட்டில் காணப்பட்ட ஈழ ஆதரவு பெருமளவில் வீழ்ச்சியடைந்துவிட்டது. அதுவரையில் வெகுசன பரப்பில் காணப்பட்ட உணர்வுபூர்வமான ஆதரவு கூட, பெருமளவில் வீழ்ச்சியடைந்துவிட்டது. சாதாரண மக்கள் மத்தியில், தமிழர்கள் என்னும் பொதுவான உணர்விருப்பது உண்மைதான் ஆனால், அது ஒரு அரசியல் திரட்சியாக மாறுமளவிற்கு அங்கு நிலைமைகள் இல்லை. தமிழ் நாட்டு அரசியல் கட்சிளை பொறுத்தவரையில், ஈழத் தமிழர் விவகாரம், அவர்களது தேர்தல் வெற்றிக்கான முதலீடாகவே பார்க்கப்படுகின்றது. இதனால், விரும்பியோ விரும்பாமலோ ஈழத் தமிழர்களையும் கொஞ்சம் தொட்டுக் கொள்கின்றனர். ஈழ ஆதரவு அரசியலில் கருணாநிதியின் செல்வாக்கை பலவீனப்படுத்தும் வகையில்தான், ஜெயலலிதா தனிநாட்டுக்கான வாக்கெடுப்பு தொடர்பில் பேசியிருந்தார். இதனையும் ஈழத் தமிழ் தலைவர்கள் என்போர் சரியாக விளங்கிக்கொள்ளவில்லை.

இவற்றை தொகுத்து நோக்கினால், தமிழ்நாட்டின் எல்லையை சரியாக விளங்கிக்கொண்டுதான், ஈழத் தமிழர்கள் தங்களின் எதிர்பார்ப்புக்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்திய மத்திய அரசின் அணுகுமுறையும், தமிழ் நாட்டின் குரலும் ஒரு புள்ளியில் சந்திக்க வேண்டும். இல்லாவிட்டால், தமிழ் நாட்டின் குரல்களுக்கு புதுடில்லி செவிசாய்க்காது. அதே வேளை, புதுடில்லியின் கொள்கை வகுப்பாளர்களை எரிச்சலூட்டும் வகையில், தமிழ் நாட்டின் செயற்பாடுகள் அமையக் கூடாது. அதவாது, பி.ஜே.பி எதிர்ப்பிற்கு காங்கிரஸ் எதிர்ப்பிற்கு ஈழத் தமிழர்களின் அரசியலை பயன்படுத்துவது, நிறுத்தப்பட வேண்டும். ஈழ ஆதரவு என்னும் பெயரில் மத்திய அரசை எதிர்ப்பதை நிறுத்துமாறு, சீமான் போன்றவர்களுக்கு, நிதிகொடுக்கும் புலம்பெயர் தமிழர்கள் கோர வேண்டும். இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்துமாறு ஈழத் தமிழர் தலைமைகள் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளை எச்சரிக்க வேண்டும்.

தமிழ் நாட்டில் அதிகாரத்திற்கு வரவேண்டுமென்று எண்ணுபவர்களின் கதிரை ஆசைக்கு, ஈழத் தமிழர்கள் பலியாக முடியாது. 1960களுக்கு பின்னர், தங்களால் கைவிடப்பட்ட, தனிநாட்டு கோரிக்கையை, ஈழத் தமிழர்கள் தாங்கிப் பிடிக்க வேண்டுமென்று, தமிழ் நாட்டிலுள்ளோர் ஆசைப்படக் கூடாது. உங்களுக்கு தனிநாடு வேண்டுமென்றால் இந்திய மத்திய அரசை எதிர்த்து நீங்கள் போராடுங்கள். படையொன்றை திரட்டுங்கள். இந்திய இராணுவத்துடன் சண்டையிடுங்கள். உங்களது ஆசைக்காக ஈழத் தமிழர்கள் மீண்டுமொருமுறை விழ முடியாது. தமிழ் நாடு, விடயத்தில் நமது அரசியல் தரப்புக்கள் அனைவரும், தெளிவாகவும், ஆளுமையுடனும் சிந்திக்க வேண்டும். இல்லாவிட்டால், தமிழ் நாட்டின் ஆதரவென்பது, இறுதியில், தேவையில்லாமல் இந்தியா முழுவதும் ஈழத் தமிழர்களுக்கான எதிரிகளை அதிகரிக்கவே பயன்படும். இதுவரை அதுதான் நடந்திருக்கின்றது.