செய்திகள்

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நல்ல சந்தர்ப்பம்: ஜனாதிபதிக்கு அங்கஜன் கடிதம்

தமிழ் பேசும் மக்களின் அடிப்படை மற்றும் தேசிய பிரச்சினைக்கு சரியான முறையில் நிரந்தரத் தீர்வினை வழங்க புதிய அரசாங்கம் உடனடியாக முன்வரவேண்டும் என வடமாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட பிரதான அமைப்பாளருமாகிய அங்கஜன் இராமநாதன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –

இலங்கையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் யோசனைகள், ஆட்சேபங்கள், குற்றம், குறைகளுக்கு செவிசாய்க்க புதிய அரசு தயாராகவே இருப்பதாக கூறி வரும் இந்த சமயத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வாக 13வது சட்டத்தை முழுமையான அளவில் செயல்படுத்தி தேசிய பிரச்சினைக்கு சரியான முறையில் நிரந்தரத் தீர்வினை வழங்க புதிய அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.

1987 ஜுலை 29 இல் கையெழுத்திடப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் படி அதே ஆண்டு நவம்பர் 14 இல் இலங்கை பாராளுமன்றம் தனது அரசியலமைப்பில் 13வது சட்டம் மற்றும் மாகாணசபைச் சட்டம் ஆகியவற்றை அறிவித்தது. இதன்போது ஒன்பது மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன. இந்த ஒன்பது மாகாணசபைகளில் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் படி கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு நிருவாகத்தின் கீழ் கொண்டுவர இணக்கம் காணப்பட்டது. அது பிற்பட்ட காலங்களில் பலனற்று போய் விட்டது.

13வது அரசியல் அமைப்புத் சட்டம் இந்திய – இலங்கை உடன்படிக்கையின் ஒரு பகுதியாக இருந்த போதிலும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாணும் நீண்டகால அரசியல் செயற்பாட்டின் பிரதிபலனாக அது கட்டியெழுப்பப்பட்டது. இலங்கை தமிழ் மக்களின் நியாயமான பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வொன்று அவசியம் என்ற அடிப்படையை அது கொண்டிருந்தது.

இதேவேளை 2013ம் ஆண்டு வடக்கு மாகாண சபை தேர்தல் நடைபெற்று வட மாகாண சபை நிறுவப்பட்ட பொழுது அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற கௌரவ ஓய்வுநிலை நீதியரசார் சி.வி விக்னேஷ்வரன் முதலமைச்சராக தெரிவாகி பதவியேற்றதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவிடம் நான் 13ம் திருத்த சட்டத்தை அமுல்ப் படுத்துவது தொடர்பாக கலந்துரையாடி இருந்தேன்.

1994ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி கௌரவ ரணசிங்க பிரேமதாசா என்னுடைய தகப்பனார் சதாசிவம் இராமநாதனுக்குக் கூறியிருந்தார் “10 வருடங்களுக்கு தேர்தல் நடத்தாமல் மாகாண சபையை நடாத்துவதற்கு வழி அமைத்து தருகின்றேன்” என்று. இதே கருத்தையே முன்னாள் ஜனாதிபதி கௌரவ டி வி விஜய துங்காவும் கூறியிருந்தார்.

எனவே கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகிய தாங்களும் சேர்ந்து முதற்கட்டமாக புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை தேசிய பாதுகாப்பு சேவையில் தகுதி அடிப்படையில் உள்வாங்குவதுடன் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கான மாகாண சபை அதிகாரத்தையும் தேசிய பிரச்சினைக்கான நிரந்தர தீர்வையும் வழங்கவேண்டும் என்பதே எனது நீண்டநாள் கோரிக்கையாகும் என்பதை தங்களுக்கு அறியத்தருகின்றேன்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போது, “பிளவு படாத இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கான தீர்வு காணப்படும்” என்ற இச் செய்தியானது எனக்கும் என் தமிழ் மக்களுக்கும் ஒர் மகிழ்ச்சியான விடையாமாகும். 13ம் சட்டமானது 1987ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் போது இருந்த நடைமுறையில் இணைந்த வடக்கு கிழக்கு உட்பட அனைத்து மாகாணங்களுக்குமான அதிகாரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே இது புதிதாக கொண்டுவரப்படவேண்டிய விடையம் அல்ல. கடந்த 30 வருட காலத்தில் எம் இனம் அழிவுப் பாதையில் சென்றதைப் போன்று இனியும் நாம் அதே தவறை செய்யக்கூடாது. தற்பொழுது இலங்கையில் உள்ள அனைத்து மக்களும் அதிகப்படியான வாக்குகளை அளித்து இம் மாற்றத்தினை கொண்டுவந்துள்ளார்கள். இந்த வேளையில் கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகிய தாங்கள் அனைத்து கட்சிகளினது ஆதரவினை பெற்றுள்ள வேளையில், தமிழ் மக்களுக்கான தீர்வினை வழங்க தங்களுக்கு இருக்கின்ற அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன ஆகிய தாங்களும் வெளிப்படையான அரசியல் தலைவர்கள் என்பதனால் தேசியப் பிரச்சினையை சரியான முறையில் தீர்ப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது” என்று அக்கடித்தில் அங்கஜன் தெரிவித்துள்ளார்.