செய்திகள்

தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் சகல தமிழ் கட்சிகளும் கூட்டமைப்புடன் இணையவேண்டும் : கோவிந்தன் கருணாகரம் (படங்கள்)

தமிழ் மக்களுக்கான குரல்கொடுத்துக்கொண்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சேரவேண்டும்.தமிழர்களின் உரிமைகளைப்பெற்றுக்கொள்வதற்கு தமிழன் தமிழனாக வாழவேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா) அழைப்பு விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு,பயனியர் வீதி மோர்சாப்பிட்டி வை.எம்.ஏ.சி.விளையாட்டுக்கழகத்தின் 87வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடாத்திய மாபெரும் விளையாட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பயனியர் வீதியில் உள்ள வை.எம்.ஏ.சி.விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

தமிழன் இருக்கும்போது வீரனாக இருப்பான் இறக்கும்போது வீரனாகவே இறப்பான் என்பதை நாங்கள் பறைசாற்றிக்கொண்டிருக்கின்றோம்.பெண்களும் ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை மோசாப்பிட்டி மக்கள் வெளிப்படுத்தியுள்ளது பெருமையாகவுள்ளது.

2005ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம்ஆண்டு வரையான காலப்பகுதியில் வடகிழக்கில் விளையாட்டு நிகழ்வுகளுக்கு செல்லும்போது நூறு பொதுமக்களுக்கு நூறு புலனாய்வாளர்கள் உளவுபார்க்கும் நிலையிருந்தது.தமிழர்கள் என்ன நிகழ்வினை நடாத்தினாலும் உளவுப்பிரிவு இருந்து உளவுபார்க்கும்.

முன்னை அரசாங்கம் உளவுபார்த்து எமது மக்களை கஸ்டப்படுத்தி பத்து ஆண்டுகளாக அடக்கி ஒடுக்கி வைத்திருந்தார்கள்.67 ஆண்டுகளாக இழந்த உரிமைகளைப்பெறுவதற்காக போராடிக்கொண்டுள்ள எமது இலக்கின் மோசமான காலப்பகுதியாக அந்த காலப்பகுதி இருந்தது.

இந்த நிலையில் இருந்து நாங்கள் ஓரளவு மீண்டுவந்துள்ளோம்.ஜனவரி எட்டாம் திகதி அந்த விடுதலைக்காக தமிழனம் வாக்களித்து ஓரளவுவிட்டுக்கொள்ள இந்தவேளையில் எமது உரிமைகள் படிப்படியாகபெறப்படும்,இதேதலைவர் இன்னும் பத்து ஆண்டுகள் இந்த நாட்டினை ஆட்சிசெய்தால் சிறுபான்மை இனத்துக்கு எந்தவித பிரச்சினையும் ஏற்படாது என எமது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயா தெரிவித்துள்ளார்.

அந்த அடிப்படையில் இந்த அரசாங்கம் பதவிக்குவந்து மூன்று மாத காலப்பகுதிக்குள் நாங்கள் எதிர்பார்க்கும் சில வேலைகள் நடைபெற்றுவருகின்றது.

எத்தனையோ ஆண்டுகளாக சம்பூர் மக்கள் அகதிவாழ்வு வாழ்ந்து,இன்று அவர்களது காணிகள் விடுவிக்கப்பட்டு அவர்களது இடங்களில் தொழில்களை தொடங்கி அவர்களில் இடங்களில் வாழும் சூழ்நிலையேற்பட்டுள்ளது.

அதேபோல் படிப்படியாக எமது உரிமைகள் பெறப்படவேண்டும்.அதற்காக நாங்கள் ஒற்றுமையுடன் இருக்கவேண்டியகாலப்பகுதியாகவுள்ளது.கிழக்கு மாகாணசபையில் முதன்முறையாக ஆட்சி அதிகாரத்தில் பங்குபற்றியுள்ளோம்.இரண்டு அமைச்சர்கள் கிழக்கு மாகாணசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளனர்.

கிழக்கு மக்கள் நிம்மதிபெருமூச்சைவிட எண்ணும்போது தமிழ்மக்களின் பலத்த எதிர்பார்ப்புகளின் கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அதிகாரத்தில் இணைந்துள்ளோம்.கடந்த காலத்தில் கிழக்கு மாகாணசபையில் தமிழர்கள் பின்தள்ளப்பட்டார்கள்,ஒதுக்கப்பட்டார்கள்.படுவான்கரையில் உள்ள தமிழ் மக்களின் பாடசாலைகளுக்கு வேறு இனங்களை சேர்ந்தவர்கள் காவலாளிகளாக நியமிக்கப்பட்டார்கள்.இவ்வாறான நிலைமைகள் ஏற்படக்கூடாது என்பதற்காகவே ஆட்சி அதிகாரத்தில் நாங்கள் பங்குகொண்டோம்.

இன்று தமிழ் மக்கள் கிழக்கு மாகாணசபை தொடர்பில் பலத்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.அதேபோன்று எங்களது கிழக்கு மாகாண அமைச்சர்கள் துரிதமாக செயற்படவேண்டும்.எமது மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவேண்டும்.சில தற்துணிவான முடிவுகளை எடுத்து எமது மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கு முன்வரவேண்டும் என இந்தவேளையில் அறைகூவல் விடுகின்றேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 78வீதம் தமிழ் மக்களும் மிகுதியாக ஏனைய இனத்தவர்களும் உள்ளனர்.வாக்குரிமை தொடர்பில் நாங்கள் சிந்திக்கவேண்டும்.வாக்குரிமை என்பது எமது அடிப்படை உரிமையாகும்.அந்த உரிமையின் ஊடாகவே நாங்கள் நினைத்ததை பெறமுடியும்.எமது உரிமையினையும்பெறமுடியும்.அந்த உரிமைமூலமே ஜனவரி எட்டாம் இந்த நாட்டில் இருந்த பேயாட்சியை காட்டாட்சியை மாற்றியமைத்தீர்கள்.

அதேபோன்ற நிலை மீண்டும்வரவேண்டும்.எமது பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படவேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை தெரிவுசெய்யக்கூடிய தமிழர்களின் வாக்குகள் குப்பைக்கூடைக்குள் செல்கின்றது.அந்த நிலைமை மாறவேண்டும்.எமது பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படவேண்டும்.

குறுகிய காலத்தில் அடுத்த பாராளுமன்ற தேர்தலை நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம்.தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒன்றுதான் தமிழ் மக்களுக்காக போராடிக்கொண்டுள்ளது.இறுதிவரை போராடும்.

இங்குள்ள தங்கேஸ்வரி அக்கா பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.அவர் மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணையவேண்டும் என பிரார்த்திக்கின்றேன்.அதேபோன்று தமிழ் மக்களுக்கான குரல்கொடுத்துக்கொண்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சேரவேண்டும்.தமிழர்களின் உரிமைகளைப்பெற்றுக்கொள்வதற்கு தமிழன் தமிழனாக வாழவேண்டும்.இல்லாதுவிட்டால் இந்த மண்ணில் தமிழர்களின் உரிமைகளுக்காக மடிந்த ஆயிரக்கணக்கான ஆவிகளுக்கு நாங்கள் பதில் சொல்லவேண்டிவரும்.

 IMG_0008 IMG_0011 (1) IMG_0021 IMG_0027 IMG_0033 IMG_0039 IMG_0041 IMG_0055 IMG_0063 IMG_0070 IMG_0076 IMG_0079 IMG_0162 IMG_0167 IMG_0168 IMG_0171 IMG_0175 IMG_0176 IMG_0180 IMG_0182 IMG_0184 IMG_0187 IMG_0190 IMG_0192 IMG_0198