செய்திகள்

‘தம்மை வழிநடத்திய ஒளிக்கு’ சிங்கப்பூர் நன்றியுடன் விடைகொடுத்தது

சிங்கப்பூர் என்ற தேசத்தை ஸ்தாபித்து அதனை உலகில் ஒரு உன்னதமான நிலைக்கு வளர்த்தெடுத்து கடந்த திங்களன்று தனது 91 ஆவது வயதில் காலமான அதன் தந்தையும் முதல் பிரதமருமான லீ குவான் ஜியூவுக்கு சிங்கபூர் மக்கள் இன்று கண்ணீர்மல்க தமது நன்றியுணர்வை தெரிவித்து பிரியாவிடை கொடுத்தனர்.

கொட்டும் பருவகால மழையையும் பொருட்படுத்தாமல் சிங்கப்பூர் வீதிகளின் இருமருங்கிலும் திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் லீ குவானின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

பாராளுமன்றத்தில் சரியாக 12.30 மணிக்கு அவரது உடலை சுமந்துகொண்டு பீரங்கி வண்டி புறப்பட்டது. முன்னதாக அவருக்கு மரியாதை செலுத்தும் பொருட்டு தீர்க்கப்பட்ட 21 பீரங்கி வேட்டுக்களின் ஒலி சிங்கப்பூர் நகரமெங்கும் எதிரொலித்தது. முக்கிய நகர வீதிகளில் அவரது ஊர்வலம் சென்றுகொண்டிருந்த அதேநேரம், ஜெட் விமானங்கள் தாழப் பறந்து அவருக்கு மரியாதை செலுத்த மரினா குடா பகுதியில் கடற்படையினர் வணக்கம் செலுத்தினர். அவரது ஊர்வலம் மிகவும் உணர்வுபூர்வமானதாக இருந்ததாக வெளிநாட்டு செய்தியாளர்கள் தமது கருத்துக்களை பதிவுசெய்துள்ளனர்.

தனது இரங்கல் உரையில் லீயின் மகனும் தற்போதைய பிரதமருமான லீ ஹிசென் லூங் ” இத்தனை வருடங்களும் தம்மையெல்லாம் வழிநடத்திய ஒளி அணைந்துவிட்டது” என்று கூறினார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளண்டன், இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடொடொ, ஜப்பானிய பிரதமர் சின்சோ அபே, அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட், பிரித்தானிய பாராளுமன்ற சபை தலைவர் வில்லியம் ஹேக் உட்பட பல உலக தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கடந்த சில தினங்கள் லீயின் உடல் பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டிருந்தபோது நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருந்து சுமார் 5 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியதாகவும் சுமார் 10 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெளி இடங்களில் அமைக்கப்பட்டிருந்த அஞ்சலி செலுத்தும் இடங்களில் அஞ்சலி செலுத்தியதாகவும் தெரியவருகிறது.

[youtube url=”https://www.youtube.com/watch?v=6_W56oFMDPA” width=”500″ height=”300″]

[youtube url=”https://www.youtube.com/watch?v=9y7er0ViWJE” width=”500″ height=”300″]

1 2 3 4 5 7 8 9